advertisement

அ.தி.மு.க.வை அமித்ஷா கபளீகரம் செய்வது உறுதி - செல்வப்பெருந்தகை

ஜூலை 18, 2025 8:32 முற்பகல் |

 

பா.ஜ.க.வை கழற்றி விட்டு த.வெ.க. உடன் சேரலாமா என்ற முயற்சியில் அ.தி.மு.க. ஈடுபடுகிறது என்று செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.

இது குறித்து தமிழக காங்.,தலைவர் செல்வபெருந்தகை கூறியதாவது,பா.ஜ.க.விற்கு பலம் இல்லாவிட்டாலும், இத்தகைய குறுக்கு வழிகளை கையாண்டு ஆட்சியை கைப்பற்றுவது கைவந்த கலையாக இருக்கிறது. தமிழ்நாட்டில் அமித்ஷா இதே உத்தியை கையாண்டு அ.தி.மு.க.வை நிர்ப்பந்தப்படுத்தி பா.ஜ.க. கூட்டணியில் சேர வைத்திருக்கிறார். கூட்டணியில் சேர்ந்த பிறகு பலமுறை தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிதான் ஏற்படும் என்று அமித்ஷா தொடர்ந்து பேசி வருகிறார். அதைத்தான் அண்ணாமலை வலியுறுத்திக் கூறுகிறார். காலப்போக்கில் அ.தி.மு.க.வை அமித்ஷா கபளீகரம் செய்யப் போவது உறுதியாகும்.

இந்நிலையில், ஓ. பன்னீர்செல்வம், டி.டி.வி. தினகரன் ஆகியோர் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருப்பதாக கூறுகிறார்கள். ஆனால், அதை ஏற்றுக் கொள்ள எடப்பாடி பழனிச்சாமி தயாராக இல்லை. அதேபோல, பாட்டாளி மக்கள் கட்சி தந்தை, மகனுக்கு இடையே ஏற்பட்டுள்ள மோதலின் காரணமாக பிளவுபட்டு கிடப்பதால் எந்த முடிவும் எடுக்க முடியாமல் திண்டாட்டத்தில் இருக்கிறார்கள். அ.தி.மு.க. கூட்டணி என்பது தொடக்கத்திலிருந்தே பொருந்தாத, யாரும் சேர முன்வராத ஒரு தோல்வி கூட்டணியாகவே இருந்து வருகிறது. இந்த நிலையில், பா.ஜ.க.வை கழற்றி விட்டு, தமிழக வெற்றி கழகத்துடன் சேரலாமா என்ற முயற்சியிலும் அ.தி.மு.க. ஈடுபடுகிறது. இத்தகைய குழப்பங்களுக்கிடையே தனது சுற்றுப் பயணத்தில் மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமையும் என்று எடப்பாடி பழனிசாமி கூறுவதை மக்கள் எள்ளி நகையாடி வருகிறார்கள்.

எனவே, தி.மு.க. தலைமையிலான காங்கிரஸ் உள்ளிட்ட மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்டுக்கோப்பாக செயல்பட்டு வருகிறது. இக்கூட்டணியில் கருத்து வேறுபாடுகளோ, மோதல்களோ இல்லாமல் தமிழ்நாட்டில் 2026 சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க., அ.தி.மு.க. மக்கள் விரோத கூட்டணியை தோற்கடிப்பதை ஒரே நோக்கமாகக் கொண்டு செயல்படுகிறது. இதில் குழப்பம் விளைவிக்க எவர் முயற்சி செய்தாலும் அந்த முயற்சிகள் பகல் கனவாகத்தான் முடியும். எங்கள் கூட்டணி கொள்கைக் கூட்டணி. ஆனால், அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணி நிர்ப்பந்தத்தால் அமைந்த சந்தர்ப்பவாத கூட்டணி. அந்தக் கூட்டணியை தமிழ்நாட்டு மக்கள் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாமல் படுதோல்வியடையச் செய்வார்கள். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement