advertisement

இந்தியன் வங்கியில் 1,500 காலிப்பணியிடங்கள் -; விண்ணப்பிக்க அழைப்பு

ஜூலை 18, 2025 10:10 முற்பகல் |

 

பொதுத்துறை வங்கியான இந்தியன் வங்கியில் தேசிய அளவில் உள்ள 1,500 இடங்களுக்கு தொழிற்பயிற்சி அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் இன்று (ஜூலை 18) முதல் தொடங்குகிறது. இதில் தமிழ்நாட்டில் மட்டும் 277 இடங்கள் உள்ளன. பட்டப்படிப்பை முடித்தவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திகொள்ளலாம்.

இந்தியன் வங்கியில் தொழிற்பயிற்சி சட்டத்தின் கீழ் ஒவ்வொரு வருடமும் இளைஞர்களுக்கு தொழிற்பயிற்சி வழங்க வருகிறது. அந்த வகையில் 2025-ம் ஆண்டு தேசிய அளவில் 30 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பயிற்சி வழங்கப்பட உள்ளது.

மொத்தம் 1,500 இடங்களில் தமிழ்நாடு மற்றும் உத்தர பிரதேசத்தில் தலா 277 இடங்கள் உள்ளன. தொடர்ந்து, மேற்கு வங்காளத்தில் 152 இடங்கள் உள்ளன. ஆந்திர பிரதேசத்தில் 82 இடங்கள் உள்ளன. மாற்றுத்திறனாளிகளும் இந்த வாய்ப்பை பயன்படுத்திகொள்ளலாம்.


வயது வரம்புஇப்பணியிடங்களுக்கு 01.07.2025 தேதியின்படி, விண்ணப்பிக்கும் நபர்கள் 20 வயது இருக்க வேண்டும். மேலும் அதிகபடியாக 28 வயது வரை இருக்கலாம். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள், ஒபிவி பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வு உள்ளது. அதன்படி, எஸ்சி/எஸ்டி பிரிவினர் 5 வருடங்கள் வரையும், ஒபிசி பிரிவினர் 3 வருடங்கள் வரையும், மாற்றுத்திறனாளிகள் 10 வருடங்கள் வரையும் தளர்வு உள்ளது.

இந்தியன் வங்கியில் உள்ள தொழிற்பயிற்சி வாய்ப்பிற்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் 01.04.2021 தேதியின்படி, அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.

இந்தியன் வங்கியில் வழங்கப்படும் தொழிற்பயிற்சிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் ரூ.15,000 உதவித்தொகையாக வழங்கப்படும். இதில் ரூ.10,500 வங்கி மூலமும், மீதமுள்ள ரூ.4,500 அரசு மூலமும் வழங்கப்படும். இதுவே, நகர்புறங்களில் உள்ள வங்கி கிளைகளில் பயிற்சி பெறுபவர்களுக்கு ரூ.12,000 வழங்கப்படும். இதில் ரூ.7,500 வங்கி மூலமும், ரூ.4,500 மூலமும் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை
இந்தியன் வங்கி தொழிற்பயிற்சிக்கு விண்ணப்பிக்கும் நபர்களுக்கு ஆன்லைன் வழியாக ஒரு தேர்வும், அந்தந்த உள்ளூர் மொழி தகுதி திறனுக்கான ஒரு தேர்வும் நடத்தப்படும். உதாரணத்திற்கு, தமிழ்நாட்டில் உள்ள இடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள், தமிழ் மொழியில் எழுதப் படிக்க மற்றும் பேச தெரிந்திருக்க வேண்டும். ஆன்லைன் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு மொழி தகுதித் தேர்வு நடத்தப்படும்.

ஆன்லைன் தேர்வு மொத்தம் 150 மதிப்பெண்களுக்கு கொள்குறி வகையில் நடத்தப்படும். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு 12 மாதம் பயிற்சி அளிக்கப்படும்.


விண்ணப்பிக்கும் முறை
வங்கியில் பயிற்சி பெற விரும்புகிறவர்கள் https://www.indianbank.in/ என்ற இணையதளத்தில் இதற்கான அறிவிப்பை பெற்றுகொள்ளலாம். https://nats.education.gov.in/ என்ற இணையதளத்தில் பதிவு செய்ய விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணமாக ரூ.800 செலுத்த வேண்டும். எஸ்டி, எஸ்சி மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரூ.175 செலுத்த வேண்டும். இதற்கான விண்ணப்பம் ஜூலை 18 முதல் தொடங்கும் நிலையில், ஆகஸ்ட் 7 வரை விண்ணப்பிக்கலாம்.


முக்கிய நாட்கள்
விவரம்    தேதிகள்
விண்ணப்பம் தொடங்கும் நாள்    18.07.2025
விண்ணப்பிக்க கடைசி நாள்    07.08.2025
ஆன்லைன் தேர்வு    பின்னர் அறிவிக்கப்படும்

கல்லூரி படிப்பை முடித்தவர்கள், வேலை வாய்ப்புகளை தேடுபவர்கள், வங்கி பணி ஆர்வமுள்ளவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திகொள்ளலாம். பொதுத்துறை வங்கியில் பயிற்சி வாய்ப்பு, பணிக்கான அனுபவத்தை தரும். ஆர்வமுள்ளவர்கள் மேல் குறிப்பிட்டுள்ள விவரங்களின்படி விண்ணப்பிக்க வேண்டும்.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement