கல்லூரிகளில் பாலியல் குற்றச்சாட்டுகளை தெரிவிக்க புகார் குழு: நயினார் நாகேந்திரன்
பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் தெரிவித்திருப்பதாவது:-தமிழகத்தில் உள்ள 180 அரசுக் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சுமார் 46 கல்லூரிகளில் பாலியல் புகார்களைத் தெரிவிக்கும் உள்ளகப் புகார் குழுக்கள் (POSH - Internal Complaint Committees) அமைக்கப்படவில்லை என்று தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் வெளிவந்துள்ள செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. அதிலும், தங்கள் கல்லூரிகளில் உள்ளகப் புகார் குழுக்கள் இருக்கிறதா இல்லையா என்பதைத் தெரிவிக்கக் கூட கிட்டத்தட்ட 113 அரசுக் கல்லூரிகள் அலட்சியம் காட்டியுள்ளன. மேலும், உள்ளகப் புகார் குழுக்கள் அமைக்கப்பட்ட தஞ்சாவூர், ராசிபுரம், நாமக்கல் அரசுக் கல்லூரிகளில் தலா ஒரே ஒரு பாலியல் புகாரே பதியப்பட்டுள்ளது. அவையும் "சமாதானமாக" முடித்து வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அண்ணா பல்கலைக்கழக மாணவி ஒருவருக்கு திமுக உடன்பிறப்பால் நிகழ்ந்த வன்கொடுமையைக் கண்டு தமிழகமே கொதித்தெழுந்த பின்பும், கல்வி நிலையங்களில் மாணவிகளின் பாதுகாப்பிற்கென செய்யவேண்டிய அடிப்படைக் கட்டமைப்பைக் கூட அரசு செய்யத் தவறியுள்ளது மிகக் கொடுமையானது. பெண்களுக்கு எதிரான குற்றங்களை இரும்புக் கரம் கொண்டு அடக்குவோம் என்று விளம்பரங்களில் முழங்குவது உண்மையானால், அனைத்து அரசுக் கல்லூரிகளிலும் பாலியல் புகார்களைத் தெரிவிக்கும் உள்ளகப் புகார் குழுக்களைத் திமுக அரசு உடனடியாக அமைக்க வேண்டும் என்று முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலினை வலியுறுத்துகிறேன்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
கருத்துக்கள்