நாகர்கோவில் : மாணவனிடம் பாலியல் அத்துமீறல்.. 3 மாணவர்கள் மீது போக்சோ வழக்கு!
நாகர்கோவில் வடசேரி பகுதியில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளி பிளஸ்-1 மாணவனிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட சக மாணவர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.இந்த சம்பவம் நாகர்கோவில் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாகர்கோவில் வடசேரி பகுதியில் செயல்பட்டு வரும் அரசு உதவிபெறும் பள்ளியில் பிளஸ்-2 வரை வகுப்புகள் நடந்து வருகிறது. இங்கு நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
இப்பள்ளியில் பிளஸ்-1 படித்து வரும் நாகர்கோவில் பகுதியை சேர்ந்த ஒரு மாணவனுக்கு, அங்கு பிளஸ்-2 படிக்கும் 3 மாணவர்கள் சேர்ந்து தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளனர். இதனால் பாதிக்கப்பட்ட பிளஸ்-1 மாணவன் பெற்றோருடன் , இதுகுறித்து நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படும் நாகர்கோவில் பகுதியை சேர்ந்த 3 மாணவர்களில் 2 பேரை கைது செய்தனர்.
பின்னர், இருவரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி பாளையங்கோட்டையில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்த்தனர். தலைமறைவாக உள்ள மற்றொரு மாணவனை போலீசார் தேடி வருகிறார்கள்.
கருத்துக்கள்