மயிலாடுதுறை மதுவிலக்கு டி.எஸ்.பி. சுந்தரேசன் சஸ்பெண்ட்
மயிலாடுதுறை மதுவிலக்கு அமல்பிரிவு துணை டி.எஸ்.பி. சுந்தரேசன். இவருடைய அலுவலக வாகனம் பறிக்கப்பட்டு விட்டதாக தகவல் பரவியது. மேலும் இவர் தனது வீட்டில் இருந்து அலுவலகத்துக்கு நடந்து சென்றதாக வீடியோவும் ஊடகங்களில் வெளியானது. இதுகுறித்து விளக்கம் அளித்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின், மதுவிலக்கு பிரிவு டி.எஸ்.பி. சுந்தரேசனிடம் அலுவல் பணி காரணமாக பெறப்பட்ட வாகனத்தை திரும்ப ஒப்படைத்து விட்டதாக தெரிவித்திருந்தார்.
கூடுதல் டி.ஜி.பி.டேவிட்சன் தேவாசீர்வாதம், உளவுத்துறை ஐ.ஜி.செந்தில்வேலன் ஆகிய உயர் அதிகாரிகளின் காழ்ப்புணர்ச்சி காரணமாக தனக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அழுத்தம் தருவதாகவும், அலுவலக வாகனத்தை பறித்து மனரீதியாக சித்ரவதை செய்வதாக டி.எஸ்.பி.சுந்தரேசன் குற்றம் சாட்டி பேட்டி அளித்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக தஞ்சை மண்டல டி.ஐ.ஜி. ஜியாவுல் ஹக் நேற்று மயிலாடுதுறை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் போலீஸ் அதிகாரிகளிடம் விசாரணை நடத்தினார். விசாரணையின் முடிவில் டி.எஸ்.பி. சுந்தரேசனை பணியிடை நீக்கம்(சஸ்பெண்டு) செய்ய அவர் திருச்சி சரக ஐ.ஜி.க்கு பரிந்துரை செய்தார்.
இந்த நிலையில், மயிலாடுதுறை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு டி.எஸ்.பி. சுந்தரேசனை பணியிடை நீக்கம் செய்து உள்துறை செயலாளர் தீரஜ்குமார் உத்தரவிட்டுள்ளார். அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறி பேட்டி அளித்ததாக சுந்தரேசன் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கருத்துக்கள்