advertisement

வீரவநல்லூரில் மாணவர் தற்கொலை சம்பவம்: கல்லூரி மாணவர் கைது

ஜூலை 19, 2025 3:36 முற்பகல் |

பள்ளி வாகத்திற்கு தீ வைத்த விவகாரத்தில் 2 கல்லூரி மாணவர்கள் மீது வழக்கு பதியப்பட்ட நிலையில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நெல்லை மாவட்டம், வீரவநல்லூர் அருகே உள்ள மானாபரநல்லூர் வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் சங்கரகுமார், விவசாயி. இவரது 15 வயது மகன் சபரி . இவர், வீரவநல்லூரில் உள்ள செயின்ட் ஜான்ஸ் மெட்ரிக்குலேசன் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.ஆசிரியர்கள் திட்டியதால் வேதனையடைந்த மாணவன் கடந்த 7-ந்தேதி விஷம் குடித்துவிட்டு பள்ளிக்கு வந்தார். பின்னர் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார்.

இதனால் ஆத்திரமடைந்த மாணவரின் உறவினர்கள் 100-க்கும் மேற்பட்டோர் அன்று இரவு வீரவநல்லூர் போலீஸ் நிலையம் முன்பு திரண்டு உடலுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்கள் மாணவரின் இறப்புக்கு காரணமான ஆசிரியர்கள் மற்றும் பள்ளி நிர்வாகத்தினரை கண்டித்து கோஷம் எழுப்பினர்.

சாலை மறியலால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் அங்கு வந்த வீரவநல்லூர் போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதுபற்றி உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் தெரிவித்ததால் மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

பின்னர் மாணவரின் தந்தை சங்கர குமார் வீரவநல்லூர் போலீசில் அளித்த புகாரில், ''எனது மகனை 10-ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெறவிடமாட்டோம் என்று மிரட்டியதால் விஷம் குடித்துவிட்டான். எனவே, மகனை தற்கொலைக்கு தூண்டிய வகுப்பு ஆசிரியர் சுபா, பள்ளி முதல்வர் சீதா லெட்சுமி, தாளாளர் மங்கையர்கரசி, நிர்வாக இயக்குனர் ஷாம் மற்றும் அவரது மனைவி ஆகியோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்" என கூறப்பட்டிருந்தது. அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், மாணவரின் உடலுடன் மறியலில் ஈடுபட்ட 50 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதனிடையே இரவு 11 மணிக்கு மேல் மாணவர்படித்த பள்ளி வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த பள்ளி வாகனங்களுக்கு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசியதாக கூறப்படுகிறது. அதில் தீப்பிடித்து 2 பஸ்கள் முற்றிலும் சேதமடைந்ததாகவும் பரபரப்பு தகவல் வெளியானது.தகவலறிந்ததும் நேற்று காலை போலீசார் மற்றும் தடய அறிவியல் உதவி இயக்குனர் ஆனந்தி தலைமையிலான அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். தீயில் எரிக்கப்பட்ட 2 பஸ்களில் தடய அறிவியல் நிபுணர்கள் அங்குலம் அங்குலமாக ஆய்வு செய்தனர். அதில், பெட்ரோல் குண்டுகள் வீசப்படவில்லை என்பதும், மர்ம நபர்கள் பெட்ரோல் ஊற்றி தீவைத்து பஸ்களை எரித்தது தெரியவந்தது.

வீரவநல்லூர் போலீசார் பள்ளி வளாகத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தபோது, இரவு 11 மணிக்கு மேல் மர்ம நபர்கள் 2 பேர் பள்ளி வளாகத்துக்குள் வந்து வாகனங்களுக்கு தீவைக்கும் காட்சிகள் பதிவாகியிருந்ததை கண்டுபிடித்தனர்.பள்ளி வாகனத்திற்கு தீ வைத்த விவகாரத்தில் 2 கல்லூரி மாணவர்கள் மீது வழக்கு பதியப்பட்ட நிலையில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அரிகேசவநல்லூரைச் சேர்ந்த 18 வயது கல்லூரி மாணவன் ஒருவர் கைதான நிலையில், மற்றொருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement