advertisement

அஞ்சலகங்களில்  ஆதார் பதிவு, திருத்தம் செய்ய சிறப்பு ஏற்பாடு!

ஜூலை 19, 2025 8:42 முற்பகல் |

 


தூத்துக்குடி கோட்டத்தில் உள்ள அஞ்சலகங்களில் காலை 8 மணி முதல் இரவு 8 வரை ஆதார் சேவை வழங்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து தூத்துக்குடி முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் வதக் ரவிராஜ் ஹரிஷ்சந்திர வெளியிட்ட செய்திக்குறிப்பில், "பொது மக்களின் பயன்பாட்டிற்காக தூத்துக்குடி கோட்டத்தின் அனைத்து தலைமை தபால் நிலையங்களில் ஆதார் சேவை 12 மணி நேரம் வழங்கப்பட்டு வருகிறது. 

தூத்துக்குடி, திருச்செந்தூர் மற்றும் ஸ்ரீவைகுண்டம் தலைமை தபால் நிலையங்களில் ஆதார் பதிவு மற்றும் திருத்தம் செய்யும் வசதி தினமும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை அளிக்கப்படுகிறது. இந்த ஏற்பாடு முற்றிலும் பொது மக்களின் வசதிக்காகவும், வேலைக்கு செல்வோரின் ஆதார் தேவைகளைப் பூர்த்தி செய்யவும், பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் பயனடையும் வகையிலும் செய்யப்பட்டுள்ளது.

தூத்துக்குடி கோட்டத்தில் பிற அஞ்சலகங்களான, ஆழ்வார்திருநகரி, ஆறுமுகநேரி, ஆத்தூர், சிதம்பரநகர், ஏரல், காயல்பட்டினம், குலசேகரப்பட்டணம், குரும்பூர், மெஞ்ஞானபுரம், மேலூர், முதலூர், மூக்குப்பீறி, நாசரேத், ஓட்டப்பிடாரம், பரமன்குறிச்சி, புதுக்கோட்டை, சாத்தான்குளம், சாயர்புரம், செய்துங்கநல்லூர், உடன்குடி கிறிஸ்தியானகரம், வல்லநாடு, முத்தையாபுரம், ஆனந்தபுரம், காயாமொழி, கொம்மடிக்கோட்டை, மில்லர்புரம், முடிவைத்தானேந்தல், புதியம்புத்தூர், மற்றும் படுக்கப்பத்து ஆகிய அஞ்சலகங்களில் ஆதார் பதிவு மற்றும் திருத்த சேவை மையங்கள்  செயல்பட்டு வருகின்றன.

இந்த அஞ்சலக ஆதார் சேவை மையங்களில் புதிதாக ஆதார் பதிவு செய்ய கட்டணம் இல்லை. குழந்தைகளுக்கு 5-7 வயது மற்றும் 15-17 வயதில் செய்ய வேண்டிய கட்டாய கைரேகை மற்றும் கருவிழி புதுப்பித்தல்களுக்கும் கட்டணம் இல்லை. பெயர், வீட்டு முகவரி, வயது, பிறந்த தேதி, மின்னஞ்சல், தொலைபேசி எண் உள்ளிட்ட திருத்தங்களுக்கு கட்டணம் ரூ.50, புகைப்படம், கைரேகை, கருவிழி திருத்தங்கள் மேற்கொள்ள கட்டணம் ரூ.1௦௦ ஆகும்.. 

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement