மசோதா மீது முடிவு செய்ய காலக்கெடு நிர்ணயிப்பு? உச்ச நீதிமன்றத்திற்கு குடியரசுத் தலைவர் கேள்வி
தமிழ்நாடு சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேற்றப்பட்ட 10 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல் நிலுவையில் வைத்திருந்ததை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. இந்த வழக்கில் நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா மற்றும் ஆர். மகாதேவன் அமர்வு கடந்த 8ஆம் தேதி தீர்ப்பளித்தது. மீண்டும் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநர் நிறுத்தி வைத்தது சட்டவிரோதம் எனக் கூறிய நீதிபதிகள், குடியரசுத் தலைவருக்கு மசோதாக்கள் அனுப்பியதை ரத்து செய்தும், சட்டப்பிரிவு 142-ன் கீழ் உச்சநீதிமன்றத்தின் சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தியும் 10 மசோதாக்களுக்கும் ஒப்புதல் அளித்தனர். ஆளுநர் மட்டுமின்றி குடியரசு தலைவர் முடிவெடுக்கவும் காலக்கெடு நிர்ணயித்து உத்தரவிட்டது.
இந்நிலையில், சட்டம் தொடர்பான சந்தேகங்கள் எழும்போது, உச்சநீதிமன்றத்திடம் ஆலோசனை கேட்கும் அரசியலமைப்பு சட்டப்பிரிவு 143-ன் கீழ், குடியரசு தலைவர் திரௌபதி முர்மு 14 கேள்விகளை முன்வைத்துள்ளார். அதில், மசோதாக்கள் மீது முடிவெடுக்க, குடியரசு தலைவர் மற்றும் ஆளுநருக்கு அரசியலமைப்பு சட்டப்பிரிவில் வழங்கப்பட்டுள்ள அனைத்து வாய்ப்புகளுக்கும் ஒரே அளவிலான காலக்கெடுவை நிர்ணயிக்க முடியுமா என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
மேலும், குடியரசு தலைவர் மற்றும் ஆளுநர் தங்கள் அதிகாரங்களுக்கு உட்பட்டு மேற்கொள்ளும் செயல்களுக்கு நீதிமன்றத்தில் பொறுப்பாக மாட்டார்கள் என்ற அரசியலமைப்பு சட்டப்பிரிவு 361, மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கும் விவகாரத்திற்கு செல்லுபடியாகாதா என்றும் வினவியுள்ளனர். மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்கள் ஆளுநரின் ஒப்புதல் இன்றி சட்டமாக்க முடியுமா என்றும் குடியரசு தலைவர் உச்சநீதிமன்றத்திடம் கேள்வி எழுப்பியுள்ளார். மசோதாக்களுக்கு காலக்கெடு நிர்ணயித்த பர்திவாலா மற்றும் மகாதேவன் அமர்விலேயே இக்கேள்விகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
கருத்துக்கள்