advertisement

திருச்செந்தூர் முருகன் கோவில் கும்பாபிஷேக நேரம் குறித்து அறநிலையத்துறைக்கு உயர்நீதிமன்றம் கேள்வி

ஜூன் 17, 2025 6:29 முற்பகல் |

 


திருச்செந்தூர் கோவில் நடைமுறைகள், மரபுகளை பின்பற்றி கும்பாபிஷேகம் நடத்துவதற்கான நேரம் குறிக்கப்பட்டு உள்ளதா? என அறநிலையத்துறை ஆணையர் பதில் அளிக்கும்படி உயர்நீதிமன்ற மதுரை கிளை  உத்தரவிட்டது.

பிரசித்தி பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் ஜூலை மாதம் 7-ந்தேதி கும்பாபிஷேகம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. அதற்கான பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்தநிலையில் கும்பாபிஷேகம் நடத்துவதற்கான நேரம் ஆகமவிதிகளின்படி குறிக்கப்படவில்லை என வீரபாகுமூர்த்தி என்பவர் உள்பட சிலர் மதுரை ஐகோர்ட்டில் கடந்த மாதம் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, திருச்செந்தூர் கோவில் கும்பாபிஷேகம் நடத்துவதற்கான நேரத்தை தேர்வு செய்ய குழு அமைத்து உத்தரவிட்டது. அதன்படி கும்பாபிஷேகத்தை வருகிற 7-ந்தேதி அன்று காலை 6.15 மணி முதல் 6.50 மணி வரை நடக்கும் என கோவில் நிர்வாகம் அறிவித்து உள்ளது. இதற்கிடையே கும்பாபிஷேக நேரம் அறிவிப்பை மறுசீராய்வு செய்ய உத்தரவிடக்கோரி, சிவராமசுப்பிரமணிய சாஸ்திரிகள், மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேகம் 7.7.2025 அன்று காலை 6.15 மணி முதல் காலை 6.50 மணி வரை என நடைபெறும் என கோவில் நிர்வாகம் அறிவித்து உள்ளது. இதற்கு பதிலாக 7.7.2025 பகல் 12.05 மணி முதல் 12.47 மணி வரை தோஷங்கள் இல்லாத நேரத்தில் கும்பாபிஷேகம் நடத்த உத்தரவிட வேண்டும். அதுவரை கும்பாபிஷேக அழைப்பிதழ்களை வழங்குவதற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என கூறியிருந்தார். 

இதில் மனுதாரர் வக்கீல் வாதிடுகையில், கோவிலின் ஆகமம், மரபுகளை பின்பற்ற வேண்டும் என்ற நோக்கத்தில்தான் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இதில் எந்த சுயநலமும் இல்லை என வாதாடினார். விசாரணை முடிவில், கோவில் நடைமுறைகள், மரபுகளை பின்பற்றி கும்பாபிஷேகம் நடத்துவதற்கான நேரம் குறிக்கப்பட்டு உள்ளதா? என்பது பற்றி இந்து சமய அறநிலையத்துறை கமிஷனர் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தனர்.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement