advertisement

திமுக அரசை 2026 தேர்தலில் பொதுமக்கள் தூக்கி எறிவார்கள்: அதிமுக கண்டனம்

ஆக. 29, 2025 8:41 முற்பகல் |

 

தமிழ்நாட்டில் அனைத்து நகர்ப்புற மற்றும் ஊரகப் பகுதிகளில் முகாம்கள் நடத்தி மக்களிடம் மனுக்களை பெறும் வகையில் 'உங்களுடன் ஸ்டாலின்' என்ற புதிய திட்டத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஜூலை 15 ஆம் தேதி தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் 10,000 இடங்களில் முகாம்கள் நடைபெற்று ஊரகப் பகுதிகளைப் பொறுத்தவரை 15 துறைகளின் வாயிலாக 45 சேவைகளும், நகர்ப்புறங்களைப் பொறுத்தவரை 13 துறைகளின் வாயிலாக 43 சேவைகளும், வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் வைகை ஆற்றில் 'உங்களுடன் ஸ்டாலின்' முகாமில் பெறப்பட்ட மனுக்கள் மிதப்பதைக் கண்டு பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். ஆற்று நீரில் மிதந்து வந்த மனுக்களை சேகரித்த போலீசார், இதுதொடர்பாக விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இந்த சம்பவத்திற்கு அ.தி.மு.க. சார்பில் அதன் சமூக வலைதள பக்கத்தில் கடும் விமர்சனம் செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பான அந்த பதிவில், “பொதுமக்கள் அளித்த மனுக்களை தூக்கி எறிந்த திமுக அரசை 2026 தேர்தலில் பொதுமக்கள் தூக்கி எறிவார்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சியினர் சமூக வலைதளங்களில் திமுக அரசை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement