திமுக அரசின் அலட்சியம் - நயினார் நாகேந்திரன் கண்டனம்!
பாரதிதாசன் பல்கலைக்கழக விரிவுரையாளர்களுக்கு நிலுவையில் உள்ள ஊதியத் தொகையை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் அரசுக் கல்லூரிகளில் பணியாற்றும் 109-க்கும் மேற்பட்டோருக்கு கடந்த மூன்று மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை என்று வெளியாகியுள்ள செய்தி ஆளும் திமுக அரசின் அலட்சியத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. தங்கள் வாக்குறுதியைக் காப்பாற்ற இயலாத முதல்வர் மு.க.ஸ்டாலின், தற்போது உழைப்பிற்கான ஊதியத்தையும் அரசு ஊழியர்களுக்குக் கொடுக்க மறுப்பது அப்பட்டமான உழைப்புச் சுரண்டல்.
கடந்த ஜூன் மாதம் முதலான அவர்களின் ஊதியத்தை நிறுத்தி வைத்துள்ளது என்றால், ஆளும் அரசுக்கும் அதன் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்கும் பல்கலைக் கழகங்களுக்கும் சட்டத்தின் மீது துளிகூட மரியாதையும் அச்சமும் இல்லை என்பது தானே பொருள்?
மாதக்கணக்கில் ஊதியம் வழங்கப்படவில்லை என்றால் ஊழியர்களின் அன்றாட வாழ்க்கை எப்படி சாத்தியமாகும்? திமுக ஆட்சியில் பேராசிரியர் பற்றாக்குறையால் தள்ளாடும் அரசுக் கல்லூரிகளைத் தாங்கிப் பிடிக்கும் கவுரவ விரிவுரையாளர்களை அரசு இப்படி வஞ்சிக்கலாமா? திமுக அரசின் இந்த ஆணவத்தால் பாடம் கற்பிப்பவர்களின் வாழ்வாதாரமும், பாடம் கற்றுக் கொள்பவர்களின் எதிர்காலமும் ஒருசேர பாழாகிக் கொண்டிருப்பதை முதல்வர் இன்னும் உணரவில்லையா? நிலுவையில் உள்ள பல்கலைக்கழக ஊழியர்களின் ஊதியத் தொகையை உடனடியாக விடுவிப்பதற்கு முறைப்படுத்த வேண்டுமென முதல்வர் மு.க. ஸ்டாலினை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
கருத்துக்கள்