குடியாத்தம் அருகே மின்கம்பியில் சிக்கி குழந்தை, நாய் பலி;
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த நத்தமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் குமார். கட்டிட தொழிலாளியான இவருக்கு ஜானகி என்ற மனைவியும், 4 பெண் குழந்தைகளும் உள்ளனர். இந்த நிலையில், குமார் வீட்டின் அருகே அத்திராமுலூ என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் தென்னை மரம் வெட்டும் பணி நடைபெற்றது.
அப்போது தென்னை மரம், குமார் வீட்டின் அருகே இருந்த மின் கம்பியின் மீது சாய்ந்ததில் மின்கம்பம் உடைந்தது. இதனால் அருகே விளையாடிக் கொண்டிருந்த குமாரின் மூன்றாவது மகள் 5 வயது நவ்யா என்ற பெண் குழந்தை, மின் கம்பியில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் அருகே இருந்த நாய் ஒன்றும் மின் கம்பியில் சிக்கி உயிரிழந்தது.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த குடியாத்தம் போலீசார் மற்றும் மின் துறை அதிகாரிகள் சிறுமியின் உடலை மீட்டு உடல்கூறு ஆய்வுக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து குடியாத்தம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, பாதுகாப்பற்ற முறையில் தென்னை மரம் வெட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கருத்துக்கள்