தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து குழந்தை பலி
திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கத்தை அடுத்த தேவனாம்பட்டு ஊராட்சியைச் சேர்ந்தவர் பழனி. கூலித்தொழிலாளி. இவரது மனைவி பார்கவி. இவர்களது மகள் பிரவீனா 1-ம் வகுப்பு படித்து வருகிறாள். மகன் முகிலன்( வயது 2) . நேற்று முன்தினம் முகிலன் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தான்.
இதை யாரும் கவனிக்கவில்லையென தெரிகிறது. அப்போது வீட்டின் அருகே உள்ள தண்ணீர் தொட்டியில் முகிலன் தவறி விழுந்து விட்டான். சற்றுநேரம் கழித்து தாயார் பார்கவி வந்தபோது அவனை காணவில்லை. தொடர்ந்து தேடியபோது, தண்ணீர் தொட்டியில் முகிலன் மூச்சுத்திணறி மயங்கி கிடந்ததை பார்த்து கதறி அழுதபடி மகனை மீட்டார்.
பின்னர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் முகிலனை நார்த்தாம்பூண்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின் மேல் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது முகிலன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கருத்துக்கள்