advertisement

பரமக்குடி புதிய ரயில் நிலையத்தை மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் ஆய்வு

மே 28, 2026 7:08 முற்பகல் |

பரமக்குடியில் புதியதாக வடிவமைக்கப்பட்டு வரும் ரயில் நிலையத்தை மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் ஓம்பிரகாஷ் மீனா ஆய்வு. பரமக்குடி வியாபாரிகள் சங்கம், ரயில்வே பயணிகள் ஆலோசனை குழு உறுப்பினர் கோரிக்கை மனுக்கள் வழங்கி வலியுறுத்தினார்.

ராமநாதபுரம் மாவட்டத்தின் இதயப் பகுதியாக விளங்குவது பரமக்குடி நகரம். இந்நகரைச் சுற்றிலும் முதுகுளத்தூர், சாயல்குடி, கமுதி, பார்த்திபனூர், இளையான்குடி உள்பட நூற்றுக்கணக்கான கிராமங்கள் அமைந்துள்ளதால், அனைத்து பொதுமக்களும் மதுரை, ராமநாதபுரம், சென்னை, கோவை, திருப்பதி உள்பட வெளிமாநிலங்களுக்கு செல்வதெனில் பரமக்குடி ரயில் நிலையம் வந்து செல்ல வேண்டும்.
மேலும், புண்ணியஸ்தலமான ராமேஸ்வரம் செல்ல வேண்டியிருந்தாலும் மதுரையில் இருந்து பரமக்குடி வழியாகச் செல்வார்கள். இதனால் மதுரை கோட்டத்தில் மதுரைக்கு அடுத்தபடியாக வருமானம் வரக்கூடிய ரயில்வே நிலையம் பரமக்குடி .

இதனால், அகலப் பாதை ரயில் தடம் அமைக்கப்படவும், வடநாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் ரயில்சேவையை தொடங்கவும், ஏற்கனவே இயங்கிக் கொண்டிருந்த ரயில் சேவையை இயக்கவும் பல வருடங்களாக பரமக்குடி வியாபாரிகள் சங்கம், பரமக்குடி நுகர்வோர் பாதுகாப்பு உரிமைகள் கழகம், ரயில் பயணிகள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்து வலியுறுத்திய வண்ணமாய் இருந்தனர். இதனை கருத்தில் கொண்ட மத்திய அரசும், ரயில்வே துறையினடும் அனைத்து ரயில்களும் வந்து செல்வது போன்றும், பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு பரமக்குடி ரயில் நிலையத்தை புதியதாக வடிவமைக்க உத்தரவு பிறப்பித்து நிதி ஒதுக்கீடு செய்தது.
அதனடிப்படையில், பரமக்குடி ரயில் நிலையத்தின் முகப்பு பகுதியை விரிவாக்கம் செய்து - ஆர்ச் அமைத்தும், இரவு நேரத்தில் வண்ண மின் விளக்குகள் அமைத்தும், பிளாட்பாரங்கள் நீட்டிப்பது, மேற்கூரைகள் நீடிப்பது, லிப்ட் வசதி, கோச் இண்டிகேட்டர் வசதி, குடிநீர், மின் விளக்கு, காற்றாடி அமைத்தல், கழிப்பிடவசதி என பரமக்குடி ரயில் நிலையத்தில் கட்டிட பணிகள் துரிதமாக நடைபெற்று வந்தது.

புதியதாக வடிவமைக்கப்பட்ட பரமக்குடி ரயில் நிலையத்தை முழுமையாக ஆய்வு செய்வதற்காக மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் ஓம்பிரகாஷ் மீனா மதுரையில் இருந்து பரமக்குடி ரயில் நிலையம் வந்தடைந்தார்.அவரை பரமக்குடி ரயில் நிலைய அதிகாரி வி. என்.ஐயப்பன் பொன்னாடை போர்த்தி வரவேற்றார்.தொடர்ந்து,  மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் ஓம்பிரகாஷ் மீனாவை பரமக்குடி வியாபாரிகள் சங்கத் தலைவர் ராசி என். போஸ், இணைச் செயலாளர் மா. மணவாளன் உள்பட நிர்வாகிகள் பொன்னாடை போர்த்தி கௌரவித்தனர். ரயில்வே பயணிகள் ஆலோசனை குழு உறுப்பினர் ஏ. ஜெய்னூல் ஆலம் பொன்னாடை போர்த்தி வரவேற்றார்.
      தொடர்ந்து, அவரிடம் பரமக்குடி வியாபாரிகள் சங்கத் தலைவர் ராசி என்.போஸ் கோரிக்கை மனு ஒன்றை வழங்கி வலியுறுத்தினார் . அந்த கோரிக்கை மனுவில் வலியுறுத்தியுள்ளதாவது :
         விரைவில் சென்னை - ராமேஸ்வரம் வரை இயக்கப்படவிருக்கும் வந்தே பாரத் அதிவிரைவு ரயிலை பரமக்குடி ரயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டுமெனவும்,
          மீட்டர் கேஜ் பாதையில் இயங்கி வந்தது போன்று கோவைக்கு தினசரி ரயில் சேவையை தொடங்க வேண்டுமெனவும், வட மாநிலங்களுக்குச் செல்லும் அனைத்து ரயில்களும் பரமக்குடி ரயில் நிலையத்தில் நின்று செல்வதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி கூறியுள்ளனர்.
        தொடர்ந்து, ரயில்வே பயணிகள் ஆலோசனைக் குழு உறுப்பினர் ஏ. ஜெய்னுல் ஆலம் மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் ஓம்பிரகாஷ் மீனாவிடம் கோரிக்கை மனு வழங்கி வலியுறுத்தினார். அந்த மனுவில் வலியுறுத்தியுள்ளதாவது :
         ஹூப்ளி - ராமேஸ்வரம் சிறப்பு ரயில் பரமக்குடியில் நிறுத்தம் இல்லாத காரணத்தினால் பரமக்குடி, அதனைச் சுற்றியுள்ள மக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். 
          மேலும், பரமக்குடி ரயில் நிலையம் " என்எஸ்ஜி 4 " தரவரிசை பெற்ற ரயில் நிலையமாகும். 2024 - 2026 நிதியாண்டிற்கான இதன் வருவாய் ரூ.11,09,24,860 / = ஆகவும், பயணிகளின் வருகை 15, 98,816 ஆகவும் உள்ளது.
        ஹூப்ளி - ராமேஸ்வரம் சிறப்பு விரைவு ரயில் ஓசூர், பெங்களூருவின் தொழில், மின்னணு நகரங்களை இணைக்கிறது. பரமக்குடியை அந்நகரங்களுடன் இணைக்கும் ஒரே ரயில் இதுவாகும் .
         பரமக்குடி ரயில் நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் பலர் அந்நகரங்களில் பணிபுரிகின்றனர்.
      எனவே, வண்டி எண் : 07355 / 07356 ஹூப்ளி - ராமேஸ்வரம் சிறப்பு ரயில் பரமக்குடியில் நின்று செல்ல உரிய நடவடிக்கையை உடனடியாக எடுக்குமாறு பயணிகள் ஆலோசனை குழுவின் சார்பில் கேட்டு வலியுறுத்தப்பட்டுள்ளது.
       அதனைத் தொடர்ந்து, புதியதாக வடிவமைக்கப் பட்ட பரமக்குடி ரயில் நிலையத்தின் அனைத்து பகுதிகளையும் ஆய்வு செய்தார்.

மாமுஜெயக்குமார்.
மாவட்ட செய்தியாளர்.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement
advertisement