கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் பிராண்ட் எக்ஸ்போ
கோவை நவஇந்தியா பகுதியில் செயல்பட்டு வரும் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை , அறிவியல் கல்லூரியின் முதுநிலை மேலாண்மைத் துறை சார்பில், பல்வேறு கடைகள் , பிராண்டுகள் இடம்பெற்ற வண்ணமயமான வளாக நிகழ்வான “எக்ஸ்போரியம் 2026” எனும் நிகழ்வானது சிறப்பாக நடைபெற்றது.
நிகழ்வை கல்லூரி முதல்வர் - செயலர், முனைவர் பி.எல்.சிவக்குமார் தொடங்கி வைத்தார். நிகழ்வு எம்.பி.ஏ மாணவர்களுக்குச் சந்தைப்படுத்தல், விற்பனை, வாடிக்கையாளர் தொடர்பு, நிகழ்வு மேலாண்மை , வணிகச் செயல்பாடுகள் ஆகியவற்றில் நடைமுறை அனுபவத்தைப் பெறுவதற்கான சிறந்த வாய்ப்பை வழங்கியது.
முதுநிலை மேலாண்மைத் துறை இயக்குநர் முனைவர் என். பிரேம் ஆனந்த் , பேராசிரிய பெருமக்களின் வழிகாட்டுதலுடன், எம்.பி.ஏ மாணவர் - மாணவியர்களே இந்நிகழ்வைத் திட்டமிட்டு செயல்படுத்தினர். கடைகளின் ஒருங்கிணைப்பு, விளம்பரப்படுத்தல், பங்கேற்பாளர்களை நிர்வகித்தல், வாடிக்கையாளர் தொடர்பு, விற்பனை , நிகழ்வு சார்ந்த செயல்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை மாணவர் - மாணவியர்கள் திறம்பட மேற்கொண்டனர்.
“எக்ஸ்போரியம் 2026” நிகழ்வு, வகுப்பறையில் கற்ற மேலாண்மைக் கருத்துகளை நிஜ உலகச் சூழலில் செயல்படுத்துவதற்கான வாய்ப்பை மாணவர் - மாணவியர்களுக்கு வழங்கியது. இதன் மூலம் குழுப்பணி, தலைமைத்துவம், தகவல் தொடர்பு, முடிவெடுத்தல், பேச்சுவார்த்தைத் திறன் , சூழ்நிலைக்கேற்ப தீர்வுகள் வழங்கும் திறன் உள்ளிட்ட பல்வேறு திறன்களை மாணவர்கள் மேம்படுத்திக் கொண்டனர். நிகழ்வு, மாணவர் -- மாணவியர்களின் தொழில்முறைத் திறன்களை வளர்க்கும் மதிப்புமிக்க அனுபவக் கற்றல் முயற்சியாக அமைந்தது.நிகழ்வில் , கல்லூரியின் பல்வேறு துறைப் பேராசிரிய பெருமக்கள், மாணவர் - மாணவியர்கள் திரளாகக் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
மாமுஜெயக்குமார்.
சிறப்பு செய்தியாளர்.





கருத்துக்கள்