சங்கரன்கோவிலில் பதவி இழந்த திமுக நகர்மன்ற தலைவி
சங்கரன்கோவில் நகராட்சியின் மன்றத் தலைவி உமாமகேஸ்வரி நம்பிக்கை இல்லா தீர்மானத்தால் பதவியை இழந்தார்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகராட்சியின் மன்றத் தலைவி உமாமகேஸ்வரி மக்களுக்கு அடிப்படை வசதிகள் ஏதும் செய்ய முன்வரவில்லை என்றும், தெருவிளக்கு அமைப்பது, சாலை அமைப்பது போன்ற எவற்றிலும் மாமன்ற உறுப்பினர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதில்லை என்றும் அவர் மீது குற்றம்சாட்டப்பட்டது.
இதனால் அவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரக் கோரி நகராட்சி ஆணையரிடம் மனு அளிக்கப்பட்டிருந்தது. இந்த மனு மீதான நம்பிக்கை இல்லா வாக்கெடுப்பு இன்று நடைபெற்ற நிலையில், திமுக, அதிமுக, மதிமுக, காங்கிரஸ், எஸ்டிபிஐ மற்றும் சுயேச்சை கவுன்சிலர்கள் என அனைத்து கட்சி உறுப்பினர்களும் இவருக்கு எதிராக வாக்களித்ததாக கூறப்படுகிறது.
நகர்மன்ற தலைவிக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் 29 கவுன்சிலர்கள் கலந்துகொண்டதில், உமா மகேஸ்வரி ஒரு வாக்கு மட்டுமே பெற்றார். இதனால் சங்கரன்கோவில் நகராட்சி மன்றத் தலைவிக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கை இல்லா தீர்மானம் வெற்றி பெற்று நகர்மன்றத் தலைவி உமா மகேஸ்வரி தனது பதவியை இழந்துள்ளார்.
கருத்துக்கள்