advertisement

நடிகை திஷா பதானி வீட்டில் துப்பாக்கிச் சூடு நடத்திய நபர்கள் மீது என்கவுண்டர்

செப். 18, 2025 4:52 முற்பகல் |


 
பிரபல இந்திப்பட நடிகையான திஷா பதானி, சூர்யா நடித்த கங்குவா படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். இந்த நிலையில், உத்தரபிரதேச மாநிலம் பரேலியில் உள்ள நடிகை திஷா பதானியின் வீட்டு முன்பு, கடந்த 12-ந்தேதி அதிகாலையில் 2 பேர் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளைத் தீவிரமாகத் தேடி வந்தனர். இதற்கிடையே திஷாபதானியின் வீட்டில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்வையிட்ட போலீசார், துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களை அடையாளம் கண்டனர்.

அதில் ஒருவர் ரோஹ்தக்கில் உள்ள கானியைச் சேர்ந்த ரவீந்தர் என்பதும் மற்றொருவர் சோனிபட்டில் உள்ள இந்தியன் காலனியைச் சேர்ந்த அருண் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் குற்றவாளிகளை பிடிக்க டெல்லி, உத்தரபிரதேசம், அரியானா உள்ளிட்ட மூன்று மாநில போலீசார் அடங்கிய சிறப்பு படை அமைக்கப்பட்டது. அவர்கள் மூன்று மாநில எல்லைப் பகுதிகளிலும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் டெல்லி அருகே காசியாபாத்தில் உள்ள டிரோனிகா நகரில் பதுங்கி இருந்தது தெரிய வந்தது. அவர்களை சிறப்பு படையினர் அதிரடியாக சுற்றி வளைத்தனர். அப்போது அவர்கள் போலீசார் மீது தாக்குதல் நடத்தியதால், சிறப்பு படையினர் என்கவுண்ட்டர் மூலம் அந்த 2 பேரையும் சுட்டுக்கொன்றனர்.

இதையடுத்து போலீசார் இருவரின் உடல்களையும் மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனர்.  

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement