சேர்வைக்காரன்மடத்தில் நிறுத்தப்பட்ட மின்தடபாதை பணி – உயிர் அபாயத்தில் பொதுமக்கள்
!
தூத்துக்குடி மாவட்டம், சேர்வைக்காரன்மடம் ஊராட்சியில் கடந்த 2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தமிழ்நாடு மின்சார வாரியம் மூலம் தேரி பகுதி வழியாக மாற்று மின்தடபாதை பணி மேற்கொள்ள டெண்டர் விடப்பட்டது. ஆனால் வேலை சுமார் 6 மாதங்கள் நிறுத்தப்பட்டிருந்தது.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் தொடர்ந்து மனு அளித்த பின், 8 மாதங்கள் கழித்து 29/07/2025 அன்று பணி தொடங்கப்பட்டது. எனினும், ஒப்பந்தக்காரர்கள் வேலையை பாதியிலேயே கைவிட்டு சென்றதால், மின்கம்பிகள் தெரு வயரில் உரசி பலமுறை தீப்பற்றும் அபாய நிலை உருவாகியுள்ளது. குறிப்பாக காமராஜர் மன்றம் அருகே உயர் அழுத்த மின் கம்பிகள் ஆபத்தான நிலையில் தொங்கியதால், மக்கள் உயிர் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.
மேலும், இந்த ஊரில் சுமார் 35 குடும்பங்கள் குறைந்த மின்அழுத்தத்தால் பெரும் அவதியுறுகின்றனர். இரவு நேரங்களில் மின்விளக்குகள் சரிவர எரியாததால் மாணவர்கள் படிப்பதில் இடையூறு ஏற்படுகிறது. பொதுமக்கள் அன்றாட வாழ்வில் சிரமப்பட்டு வருகின்றனர். கடந்த ஒரு வருடமாக பலமுறை மனுக்கள் அளித்தும், பிரச்சினை தீர்க்கப்படாமல் உள்ளதாக மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
“சேர்வைக்காரன்மடம் மக்கள் நீண்டகாலமாக இந்த மின்சார பிரச்சினையால் அவதிப்பட்டு வருகின்றனர். பணி தொடங்கி நிறைவு செய்யாமல் கைவிடப்பட்டிருப்பது பொதுமக்களை உயிர் அபாயத்தில் தள்ளியுள்ளது. மாவட்ட ஆட்சியர் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுத்து பணி நிறைவு செய்யவும், குறைந்த மின்அழுத்த பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு வழங்கவும் வேண்டுகிறோம்” என முன்னாள் ஊராட்சி உபதலைவர் ஏஞ்சலின் ஜெனிட்டா வலியுறுத்தியுள்ளார்.
கருத்துக்கள்