வகுப்பறையில் தொழில்நுட்ப ஒழுங்கு – பயோனியர் குமாரசுவாமி கல்லூரி வணிகவியல் துறையின் புதுமை முயற்சி
நாகர்கோவில் பயோனியர் குமாரசுவாமி கல்லூரி வணிகவியல் துறை, மாணவர்களின் கல்வியில் தொழில்நுட்பத்தை பயனுள்ள முறையில் ஒருங்கிணைக்கும் புதிய முயற்சியை தொடங்கியது.
இன்று மொபைல் போன் மாணவர்களின் வாழ்வில் பிரிக்க முடியாத ஓர் அங்கமாகி விட்டது. கற்றலுக்கான வாய்ப்புகளோடு, அதிகப்படியான பயன்பாடு, அடிமைத்தனம், மற்றும் தவறான பயன்பாடு போன்ற சவால்களையும் மாணவர்கள் எதிர்கொள்கிறார்கள். இதனைக் கருத்தில் கொண்டு, வணிகவியல் துறை சார்பில் “மொபைல் ஒழுங்குபடுத்தப்பட்ட வகுப்பறை” (Mobile-Regulated Classroom) என்ற புதுமை திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் கீழ், மாணவர்கள் வகுப்பறைக்கு வந்தவுடன் தங்களது மொபைல் போன்களை சிறப்பு அலமாரியில் வைப்பார்கள். பாடம் தொடர்பான கலப்பு கற்றல் (Blended Learning) அல்லது டிஜிட்டல் செயற்பாடுகள் நடைபெறும் போது மட்டுமே மொபைல் எடுத்து பயன்படுத்துவார்கள். மற்ற நேரங்களில் மாணவர்கள் தாமே அதைப் பூட்டி பாதுகாப்பார்கள்.
வணிகவியல் துறைத் தலைவர் முனைவர் சுபத்ரா செல்லத்துரை அவர்கள் பேசும்போது, “இன்றைய கல்வியில் தொழில்நுட்பம் அவசியம். ஆனால் அதே நேரத்தில், மாணவர்கள் அதைப் பயன்படுத்தும் முறையிலும் ஒழுக்கம் தேவை. இந்த முயற்சி மூலம், மாணவர்களுக்கு டிஜிட்டல் கற்றல் திறன்களை வளர்ப்பதோடு, மொபைல் தவறான பயன்பாட்டிலிருந்து விலகவும், கற்றலின் மீது கவனம் செலுத்தவும் வாய்ப்பு கிடைக்கும். இது ஒவ்வொரு வகுப்பறையிலும் நடைமுறைக்கு வர வேண்டிய ஒரு தேவையான திட்டம்” என்றார்.
புதிய முயற்சியை கல்லூரி துணை முதல்வர் ரெக்சின் தஸ்நவிஸ் அவர்கள் திறந்து வைத்தார். அவர் தனது உரையில், “மாணவர்கள் தொழில்நுட்பத்தை கற்றலின் துணைவனாகப் பயன்படுத்த வேண்டும்; அதனைத் திசைதிருப்பும் சாதனமாக அல்ல” என்று வலியுறுத்தினார்.மாணவர்களிடையே ஆர்வம் ஏற்படுத்திய இந்த முயற்சி, “டிஜிட்டல் கல்வி மற்றும் ஒழுக்கம்” ஒன்றிணைந்த வகுப்பறை சூழலை உருவாக்கும் ஒரு முன்னோடி நடவடிக்கையாக திகழ்கிறது.
கருத்துக்கள்