advertisement

நெல் கொள்முதல் நிலையத்தில் லஞ்சமா திருவாரூர் எம்எல்ஏ பதில்

செப். 20, 2025 10:22 பிற்பகல் |

 

தவெக தலைவர் விஜய் கூறிய திருவாரூரில் நெல் கொள்முதல் நிலைய ஊழல் குற்றச்சாட்டுக்கு எம்எல்ஏ பூண்டி கலைவாணன் விளக்கம் அளித்துள்ளார்.

திருவாரூர் மாவட்டத்தில் நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் ரூ.10 முதல் ரூ.40 வரை லஞ்சம் வசூலிக்கப்படுவதாகத் தவெக தலைவர் விஜய் குற்றம் சாட்டியுள்ளார். இன்று திருவாரூரில் நடைபெற்ற அவரது தேர்தல் பிரச்சார கூட்டத்தில், விவசாயிகள் கடும் கஷ்டத்தில் இருக்கும்போது கூட, அவர்களிடம் கூடுதல் பணம் கேட்பது மிகப் பெரிய தவறு. தமிழ்நாட்டின் முதலமைச்சர் முக ஸ்டாலினின் சொந்த மாவட்டமே கருவாடாய் காய்கிறது என்று அவர் விமர்சித்தார்.

திருவாரூர் எம்எல்ஏ கலைவாணன் பேசுகையில், விவசாயிகள் உண்மையிலேயே சிரமத்தில் உள்ளனர். அவர்களிடம் கூடுதல் பணம் வசூலிப்பது தவறுதான். ஆனால் இது அரசாங்கத்தின் அதிகாரிகள் செய்யும் செயல் அல்ல. நெல் மூட்டைகளை தூக்கும் தொழிலாளர்கள் தான் தங்களுக்கான கூடுதல் கூலிக்காக பணம் கேட்கிறார்கள். இது பல வருடங்களாக உள்ள பழக்கம். அதிமுக ஆட்சியில்கூட மூட்டைக்கு 3 ரூபாய் வசூலித்துள்ளனர். இப்போது அது 10–40 ரூபாயாக அதிகரித்துள்ளது.


அவர் மேலும், இதற்கு முதலமைச்சர் முக ஸ்டாலினோ, திமுக அரசாங்கமோ சம்பந்தம் இல்லை. இது சில தொழிலாளர்களின் தனிப்பட்ட செயல். விவசாயிகள் தாமாகவே விருப்பப்பட்டு சில சமயங்களில் பணம் கொடுத்துள்ளனர். கட்டாயப்படுத்தப்படவில்லை. இருந்தாலும் விவசாயிகள் பாதிக்கப்படுவதே நிஜம் என்பதால், இதை கட்டுப்படுத்தும் வழிகளை அரசு ஆராயும் என்று கூறினார்.


விஜயின் குற்றச்சாட்டு குறித்து பதில்
விஜய் முன்வைத்த திருவாரூரில் அடிப்படை சாலை வசதிகள் இல்லை, மருத்துவமனைகளில் உபகரணங்கள் வேலை செய்யவில்லை, விவசாயிகள் கூட பாதுகாப்பில் இல்லை என்ற குற்றச்சாட்டை மறுத்த கலைவாணன், திராவிட மாடல் ஆட்சியின் கீழ் தமிழகத்தின் வளர்ச்சி 11.19% ஜிடிபி அளவிற்கு உயர்ந்துள்ளது. முன்னாள் முதல்வர் கருணாநிதி செயலிழந்த தமிழ்நாட்டை மீண்டும் எழுப்பினார். இன்று ஸ்டாலின் அதே பாதையில் மாநிலத்தை முன்னேற்றி வருகிறார் என்றார்.


அவர் மேலும், விவசாயிகளுக்காக தவெக தலைவர் விஜய் முன்வைக்கும் கேள்விகள் பொருத்தமானவையே. ஆனால் ஒரு சில தொழிலாளர்களின் தவறுகளை அரசாங்கத்தின் பெயரில் சுமத்துவது சரியல்ல. விவசாயிகள் பாதிக்கப்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று வலியுறுத்தினார்.
 

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement