அரியலூர்: பிரபல துணிக்கடையில் தீ விபத்து -
அரியலூர்: மின்கசிவு காரணமாக பிரபல துணிக்கடையில் ஏற்பட்ட தீ விபத்தில், கடையில் இருந்த ரூ.3 லட்சம் மதிப்பிலான ரொக்க பணம், துணிகள், மின் சாதனங்கள் தீயில் கருகி சேதமடைந்தன.
அரியலூர் நகரின் முக்கிய கடைவீதியான தேரடியில் சண்முகம் என்பவர் கடந்த பல ஆண்டுகளாக துணிக்கடை ஒன்றை வைத்து நடத்தி வருகிறார். நேற்று (அக்.20) தீபாவளி விற்பனையை முடித்துவிட்டு இரவு 7 மணியளவில் கடையை பூட்டிவிட்டு தனது வீட்டுக்கு சென்றுள்ளார்.
இந்நிலையில், இரவு 11 மணியளவில் இரவு ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார், அந்த துணிக்கடையில் இருந்து புகை வருவதை பார்த்துள்ளனர். உடனே அருகில் சென்று பார்த்தபோது துணிக்கடை உள்ளே தீப்பற்றியது தெரிந்து கொண்டிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். மேலும், கடையின் உரிமையாளர் சண்முகத்தையும் தொடர்பு கொண்டு அவருடைய கடை தீப்பற்றி எரிவதாக தெரிவித்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அரியலூர் தீயணைப்பு நிலைய அலுவலர் செந்தில்குமார் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள், கடையில் பற்றி எரிந்த தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் அதற்குள், தரைத்தளம் முழுவதும் பற்றி எரிந்ததால் தீயை அணைப்பதில் கடும் சிரமம் ஏற்பட்டது. இதனையடுத்து, செந்துறை தீயணைப்பு நிலையம் மற்றும் தனியார் சிமெண்ட் தொழிற்சாலைக்கு சொந்தமான தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபடுத்தப்பட்டன.
தொடர்ந்து, இச்சம்பவம் குறித்து அரியலூர் காவல்துறையினர் வழக்கு பதிவு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், மின்கசிவு காரணமாக துணிக்கடையில் தீ பற்றியது தெரிய வந்தது.
கருத்துக்கள்