பட்டாபிராம் நாட்டு வெடி விபத்து: முக்கிய குற்றவாளி கைது
வீட்டில் விற்பனைக்காக வைத்திருந்த நாட்டு வெடிகள் வெடித்த சம்பவத்தில் 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை ஆவடி அடுத்த பட்டாபிராம் தண்டுரை பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் மற்றும் அவரது மகன் விஜய் இருவரும், தீபாவளியை முன்னிட்டு வீட்டிலேயே நாட்டு வெடி பட்டாசுகளை தயாரித்து விற்பனை செய்து வந்தனர். எதிர்பாராத விதமாக நேற்று முன்தினம் (அக்.19) விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் வெடித்து சிதறின. இந்த விபத்தில் தீப்பற்றி, வீடு இடிந்து விழுந்ததில், பட்டாசு வாங்க வந்த யாசின் (25) சுனில் பிரகாஷ் (23), சுமன் (22), சஞ்சய் (22) ஆகிய 4 பேர் விபத்தில் சிக்கி உயிரிழந்தனர்.
ஆனால், நாட்டு வெடிகளை விற்பனை செய்த ஆறுமுகம், அவரது மகன் விஜய் மற்றும் விஜயின் நண்பர் தாமோதரன் ஆகிய 3 பேரும் உயிர் தப்பினர். இதுகுறித்து தகவலறிந்து வந்த பட்டாபிராம் போலீசார் உயிரிழந்த 4 பேர் உடல்களையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
முதற்கட்ட விசாரணையில், ஆறுமுகமும், விஜயும் எந்தவொரு உரிமமும் இல்லாமல் சட்ட விரோதமாக, கூடுவாஞ்சேரி மற்றும் ஸ்ரீபெரும்புதூர் பகுதிகளில் இருந்து வெடி மருந்துகளை வாங்கி திருவிழா, இறுதி ஊர்வலம், பண்டிகை போன்ற நிகழ்வுகளுக்கு வாடிக்கையாளர்கள் கேட்கும் பட்டாசுகளை வீட்டிலேயே வைத்து தயாரித்து கொடுத்தது தெரியவந்தது.
இதனையடுத்து, சட்ட விரோத செயலில் ஈடுபட்ட ஆறுமுகத்தையும், விஜய்க்கு வெடி மருந்துகளை ஆட்டோவில் ஏற்றி வருவதற்கு உதவியாக இருந்த அவரது நண்பர் தமோதரனையும் போலீசார் நேற்று கைது செய்தனர். தொடர்ந்து, அவர்களை பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். தொடர்ந்து, தலைமறைவாக இருந்த விஜயை கைது செய்ய உதவி ஆணையர் கிரி தலைமையில் 2 தனிப்படைகள் அமைத்து தேடி வந்தனர்.
கருத்துக்கள்