சேலத்தில் அரசுப் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை... தலைமை ஆசிரியர் கைது!
சேலத்தில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சேலம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரசு உயர்நிலைப்பள்ளி ஒன்றில் 400-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில், இப்பள்ளியின் தலைமை ஆசிரியராக ஏற்காடு அடிவாரத்தைச் சேர்ந்த சுப்ரமணியன் (வயது 59) என்பவர் பணியாற்றி வந்தார்.
கடந்த 4 மாதங்களுக்கு முன்னர், அரசுப் பள்ளிக்கு மாறுதலாகி வந்த அவர் பள்ளி மாணவிகள் பலரிடம் தகாத முறையில் நடந்து கொண்டு பாலியல்ரீதியான சீண்டலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. பின்னர், பாதிக்கப்பட்ட மாணவிகள், இதுகுறித்து தங்களது பெற்றோர்களிடம் அழுது கூறியுள்ளனர். அதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் பள்ளிக்கு திரண்டு வந்து, பெற்றோர் ஆசிரியர் கழகம் மற்றும் பள்ளி மேலாண்மை குழுவினரிடம் புகார் தெரிவித்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து, அவர்கள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கும், மாவட்ட சைல்ட் லைன் அமைப்பினருக்கும் அந்த புகார் மனுவை அனுப்பி வைத்துள்ளனர். இந்த மனுக்களின் அடிப்படையில், மாவட்ட கல்வி அலுவலர் மான்விழி மற்றும் சைல்டு லைன் நிர்வாகிகள் தனித்தனியாகச் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு நேரில் சென்று, பாதிக்கப்பட்ட மாணவிகளிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.
அப்போது, பள்ளி மாணவிகள் மற்றும் சக ஆசிரியர்களிடம் நடத்திய விசாரணையில், தலைமை ஆசிரியர் சுப்பிரமணியன் மாணவிகளிடம் பாலியல்ரீதியாக அத்துமீறியது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து சேலம் டவுன் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கல்வித்துறை சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அந்த புகாரின் பேரில், விசாரணை நடத்திய காவல் ஆய்வாளர் கலைவாணி மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட தலைமை ஆசிரியர் சுப்பிரமணியனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் மத்தியச் சிறையில் அடைத்துள்ளார்.
கருத்துக்கள்