விழுப்புரத்தில் நோயாளி காலை மாற்றி சிகிச்சை செய்த டாக்டர்கள்!
அரசு மருத்துவமனை டாக்டர்களின் கவனக்குறைவாலும், அலட்சியத்தாலும் தனியார் பஸ் கண்டக்டருக்கு தவறுதலாக அறுவை சிகிச்சை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் பெரியதச்சூரை அடுத்த விநாயகபுரம் கிராமத்தை சேர்ந்தவர் மாரிமுத்துஇவர் தனியார் பஸ்சில் கண்டக்டராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த சில மாதங்களாக வலது காலில் அதிக வீக்கம் ஏற்பட்டதால் வலி தாங்க முடியாமல் சிரமப்பட்டுள்ளார்.
எனவே கடந்த 30-ந் தேதி சிகிச்சைக்காக விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு சென்றபோது அவருக்கு டாக்டர்கள், எம்.ஆர்.ஐ. ஸ்கேன் பரிசோதனை செய்தனர். அதில் மாரிமுத்துவின் வலது காலில் 2 இடங்களில் ஜவ்வு கிழிந்த நிலையில் இருப்பதால் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளனர்.
அதன்படி மாரிமுத்துவின் வலது காலில் அறுவை சிகிச்சை செய்வதற்காக அவரை ஆபரேஷன் தியேட்டருக்கு டாக்டர்கள் அழைத்துச்சென்று அறுவை சிகிச்சை செய்தனர். பின்னர் அவர் வார்டுக்கு கொண்டு வரப்பட்டார்.
சிறிது நேரம் கழித்து மயக்கம் தெளிந்து மாரிமுத்து கண்விழித்து பார்த்தார். அப்போது அவருக்கு வலது காலில் அறுவை சிகிச்சை செய்வதற்கு பதிலாக இடது காலில் அறுவை சிகிச்சை செய்து கட்டுப் போடப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், தன்னுடைய வலது காலுக்கு பதிலாக ஏன் இடது காலில் மாற்றி அறுவை சிகிச்சை செய்துள்ளீர்கள் என்று கேட்டு கூச்சல்போட்டு கதறி அழுதார். உடனே சத்தம் கேட்டு அவரது குடும்பத்தினர் உள்ளே சென்று பார்த்து அவர்களும் அதிர்ச்சியில் உறைந்தனர்.
இது தொடர்பாக டாக்டர்களிடம் நியாயம் கேட்டு மாரிமுத்துவின் குடும்பத்தினர், உறவினர்கள் கடும் வாக்குவாதம் செய்தனர். அதற்கு வருத்தம் தெரிவித்த டாக்டர்கள், தாங்கள் தவறு செய்துவிட்டதாக கூறியதுடன் வலது காலில் அறுவை சிகிச்சை செய்வதாக கூறியுள்ளனர். இதை ஏற்றுக்கொள்ளாத மாரிமுத்துவின் குடும்பத்தினர், உறவினர்கள், அங்கிருந்த டாக்டர்களிடம் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்த தகவல் அறிந்ததும் விழுப்புரம் மேற்கு போலீசார் அங்கு விரைந்து சென்று மாரிமுத்துவின் உறவினர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் அங்கிருந்த டாக்டர்களிடமும் விசாரணை நடத்தினர்.
கருத்துக்கள்