ராமேஸ்வரத்தில் வளர்ச்சி திட்டப்பணிகளை அமைச்சர் ஆய்வு
ராமநாதபுரம் , ராமேஸ்வரம் பகுதிகளில் வனத்துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகளைதமிழ்நாடு வனம் , கதர் துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் பார்வையிட்டு ஆய்வு .
ராமநாதபுரம் , ராமேஸ்வரம் பகுதிகளில் வனத்துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமையில் மாவட்ட வன உயிரின காப்பாளர் முருகன் , ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் முன்னிலையில் தமிழ்நாடு வனம் , கதர் துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின் போது , தமிழ்நாடு வனம் , கதர் துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் ராமநாதபுரம் வட்டம், ஆற்றங்கரை பகுதியில் வனத்துறையின் மூலம் கடல் அரிப்பை தடுக்கும் வகையில் உயிர்வேலி தோட்டம் பராமரிக்கப்பட்டு வருவதை பார்வையிட்டதுடன்,
மேலும் , கடற்கரை ஓரமாக உள்ள கிராம பகுதிகளில் கடல் தண்ணீர் மூலம் பாதிப்பு ஏற்படாத வகையில் கரைகளை பலப்படுத்தும் வகையில் இது போன்ற மரங்கள் நடவு செய்து கடல் அரிப்பை தடுத்திட வேண்டுமென அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.தொடர்ந்து , அரியமான் கடற்கரை பகுதிகளை பார்வையிட்டு இப்பகுதியில் சுற்றுலா பயணிகள் அதிகம் வருவதையொட்டி வனத்துறையின் மூலம் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திட அலுவலர்களுக்கு ஆலோசனை வழங்கினார். பின்னர் , சுற்றுலா பயணிகள் பயன்பெறும் வகையில் வனத்துறையின் மூலம் செயல்பட உள்ள சூழல் அங்காடி மையத்தை திறந்து வைத்து சுற்றுலா பயணிகள் விரும்பும் வகையில் உணவுப் பொருட்கள் , அழகு சாதன பொருட்கள் விற்பனை செய்திட வேண்டுமென அறிவுறுத்தினார்.
தொடர்ந்து , குந்துக்கால் பகுதியில் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலா தலங்களை பார்வையிட்டத்துடன் கடல் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் படகில் சவாரி செய்து வருவதை பார்வையிட்டு கேட்டறிந்ததுடன், மேலும் , சுற்றுலா பயணிகளுக்கு தேவைக்கேற்ப படகுகள் இயக்க வேண்டுமென தெரிவித்தார். மேலும் , வனத்துறையின் மூலம் ஆழ்கடல் பகுதியில் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ளும் வகையில் கண்காணிப்பு கேமராக்கள் செயல்பட்டு வருவதை பார்வையிட்டு அதன் பயன்கள் , செயல்பாடுகள் குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.
பின்னர் , தனுஷ்கோடி எம்.ஆர்.சத்திரம் பகுதியில் உள்ள பறவைகள் கண்காணிப்பு மேடைகளை பார்வையிட்டதுடன் ராமேஸ்வரம் பகுதியில் உள்ள காப்புக்காடுகள் உள்ள தோட்டங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.நிகழ்ச்சியில், மாவட்ட வன அலுவலர் ஹேமலதா , ராமேஸ்வரம் நகர் மன்றத்தலைவர் கே. இ.நாசர்கான் , ராமநாதபுரம் நகர் மன்றத்தலைவர் ஆர்.கே.கார்மேகம் , நகர்மன்ற துணைத்தலைவர்கள் ராமநாதபுரம் - டி.ஆர்.பிரவீன் தங்கம், ராமேஸ்வரம் - வி.தெட்சனாமூர்த்தி , வட்டாட்சியர் ஜபார் முகம்மது , செய்தி - மக்கள் தொடர்பு மாவட்ட அலுவலர் லெ.பாண்டி , உதவி அலுவலர் நா.விஜயகுமார் உள்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
மாமுஜெயக்குமார்.
மாவட்ட செய்தியாளர் .
கருத்துக்கள்