advertisement

உங்கள் உள்ளத்தை தொட்டு பேச வருகிறேன் - எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு

ஜூலை 05, 2025 11:57 முற்பகல் |

மக்களைக் காப்போம்- தமிழகத்தை மீட்போம் என்ற சுற்றுப்பயணம் தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:-'மக்களைக் காப்போம் - தமிழகத்தை மீட்போம்!' என்னுள் கலந்திருக்கும் எனதருமைத் தமிழக மக்களே, உங்கள் அனைவருக்கும் எனது அன்பான வணக்கத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.உங்கள் அனைவருக்கும் ஓர் இனிய செய்தியைச் சொல்லவே இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். இதை எழுதும்போதே எனது உள்ளம் மகிழ்ச்சியாலும் உவகையாலும் நிறைகிறது. என்னைப் பற்றி எல்லாமும் உங்களுக்குத் தெரியும். என்னிடம் எந்த ரகசியமும் இல்லை.

ஓர் இனிய செய்தி சொல்கிறேன் என்று சொன்னேன் அல்லவா... அது என்னவென்றால், உங்கள் ஒவ்வொருவரையும் சந்திக்க உங்களைத் தேடி வருகிறேன். உங்கள் இல்லத்தையும், உள்ளத்தையும் தொட்டுப் பேச வருகிறேன்.மக்களைக் காப்போம் - தமிழகத்தை மீட்போம் என்கிற எழுச்சிப் பயணத்தில் உங்களை எல்லாம் சந்தித்து உறவாட வருகிறேன்.இந்தப் புரட்சிப் பயணத்தில் உங்களை எல்லாம் எழுச்சிமிக்கவர்களாக மாற்றுவது மட்டுமே எனது நோக்கம். வெற்றிகரமான ஒரு தமிழ் நாட்டை மீண்டும் உருவாக்குவதே எனது இந்தச் சுற்றுப் பயணத்தின் லட்சியம்.இந்தப் பயணம் 'விடியா ஸ்டாலின் அரசை வீழ்த்தும் பயணம்'. இந்தப் பயணம் மாநிலம் காக்க 'மாபெரும் பயணம்'இந்தப் பயணத்தில் உங்களை எல்லாம் மாற்றத்தை நோக்கி அழைத்துச் செல்லும் முன்னணிக் களவீரனாக நான் இருப்பேன்! பயணப் போர்க்களத்தில், ஆளும் கட்சியின் கொடுமைகளையும், சிறுமைகளையும் எதிர்த்துப் போராடும் ஒரு சிப்பாயாக இருப்பேன்!

தமிழ் நாட்டு மக்களைத் தேடி வரும் இந்த எழுச்சிப் பயணம், உங்கள் பங்களிப்போடு ஒரு மாற்றத்தை நோக்கிய வெற்றிப் பயணமாக மாறும் என்பதில் எள் முனையளவும் எனக்கு சந்தேகமில்லை.
இதற்கெல்லாம் முன்பாக, சில விஷயங்களையும் உங்களுக்குச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்... தனிமனித வளர்ச்சியிலும், கூட்டு வளர்ச்சியிலும் வீறுநடைபோட்ட தமிழ்நாடு இப்போது, சில விஷமிகளின் சுயநலத்தால் தள்ளாடுகிறது.மாலுமியை இழந்த கப்பல் போல இலக்கு தெரியாமல் தத்தளிக்கிறது. ஆட்சி நடத்துகிறவருக்கு தமிழ்நாட்டு மக்களின் நலன் பற்றிய கவலை இல்லை.


அமைதிப்பூங்காவான தமிழ்நாடு சட்டம்- ஒழுங்கு சீர்கேட்டாலும், போதைப் பொருள் பெருக்கத்தாலும் அல்லலுறுவது ஏன்?அதிகாரத்தைக் காட்டி தனிமனிதச் சொத்துக்களை அபகரிப்பதை இந்த அரசு மூடி மறைப்பது எதனால்? தாெழில் முதலீடு அண்டை மாநிலங்களுக்கு மாறுகிறது. இந்த அரசு, அனைத்துத் துறைகளிலும் தோல்வியையே கண்டுள்ளது. எனவே, திமுக அரசு அகற்றப்பட வேண்டியது காலத்தின் கட்டாயமல்லவா?நாம் தமிழ் நாட்டில்தான் இருக்கிறோமா அல்லது ஈவு இரக்கமற்ற நீரோ மன்னனின் கொடுங்கோலாட்சியில் இருக்கிறோமா என ஒவ்வொரு தமிழரும் சிந்திக்க ஆரம்பித்துவிட்டனர். மக்கள் மனத்தில் நீறுபூத்த நெருப்பாக வேதனை சூழ்ந்து கொண்டிருக்கிறது.
விடியாத ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவோம்!

தீய சக்தியை வதைத்திட,

நல்லாட்சியை விதைத்திட,

விலகாத இருள் விலகட்டும்,

தமிழகத்தில் அஇஅதிமுக ஆட்சி மலரட்டும்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement