பெண் பிள்ளைகள் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள்':முதல்வருக்கு நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்..!
திமுக ஆட்சியில் சீரழிந்து வரும் சட்டம் ஒழுங்கால் குற்றங்களின் கூடாரங்களாக பள்ளிக்கூடங்களே மாறி வரும் அவல நிலை மிகவும் கொடூரமானது என்று மாநில பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் கடுமையாக சாடியுள்ளார்.
அத்துடன், பள்ளிகளில் மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதில் திமுக அரசு ஆர்வம் காட்ட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது:
'ஊட்டி அரசுப் பள்ளியில் அறிவியல் ஆசிரியர் ஒருவர் 21 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக வெளிவந்துள்ள செய்திகள் மனதை உலுக்குகின்றன. மாணவிகள் புகார் அளித்த பின் தற்போது ஆசிரியர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுவிட்டது சிறு ஆறுதல் அளித்தாலும், பெண் பிள்ளைகளுக்கு அரசுப் பள்ளிகளில் கூட பாதுகாப்பில்லை எனும் கசப்பான உண்மை மனதை வாட்டி வதைக்கிறது.
படிக்கும் மாணவச் செல்வங்களிடம் பாலியல் சீண்டல்களில் ஈடுபடும் தைரியம் அந்த ஆசிரியருக்கு எப்படி வந்தது? திமுக ஆட்சியில் சீரழிந்து வரும் சட்டம் ஒழுங்கால் குற்றங்களின் கூடாரங்களாக பள்ளிக்கூடங்களே மாறி வரும் அவல நிலை மிகவும் கொடூரமானது. நான்காண்டு ஆட்சியின் விளம்பரங்களில் மட்டும் ஆர்வம் காட்டும் முதல்வர் ஸ்டாலின், நாளைய எதிர்காலத்தைத் தீர்மானிக்க வல்ல பள்ளிக்கூடங்களில் பெண் பிள்ளைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதிலும் ஆர்வம் காட்ட வேண்டும் என வலியுறுத்துகிறேன்.' என்று நயினார் நாகேந்திரன் அவரது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.
கருத்துக்கள்