சேலம் அருகே அதிகாலையில் பயங்கர விபத்து..ஐ.டி.ஊழியர்கள் 2 பேர் பலி!
சேலம் அருகே அதிகாலை நிகழ்ந்த பயங்கர விபத்தில் ஐ.டி.ஊழியர்கள் 2 பேர் பலி உடல் நசுங்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் தளவாய்பட்டியை சேர்ந்த சசிகுமார் என்பவருடைய மகன் சாரதி மற்றும் தாதகாப்பட்டியை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் என்பவருடைய மகள் சாருபிரியா ஆகிய இருவரும் சேலம் பகுதியில் உள்ள ஒரு ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வந்தனர்.இந்த நிலையில் சாரதி மற்றும் சாருபிரியா ஆகிய 2 பேரும் உடன் பணிபுரியும் நண்பர்களுடன் ஏற்காடு சுற்றுலா செல்ல இன்று அதிகாலை மோட்டார் சைக்கிளில் புறப்பட்டனர்.
அப்போது சாரதி மற்றும் சாருபிரியா ஆகிய 2 பேரும் ஒரு மோட்டார் சைக்கிளில் சென்றனர்.அதிகாலை திருவாக்கவுண்டனூர் மேம்பாலம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற போது அங்கிருந்த சிறு பள்ளத்தில் மோட்டார் சைக்கிளை திருப்பிய போது அந்த வழியாக சென்ற ஒரு வாகனம் அவர்கள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது.
இதில் தூக்கி வீசப்பட்ட 2 பேரும் பலத்த காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் தலை நசுங்கிய நிலையில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். இதை பார்த்த சக நண்பர்கள் அதிர்ச்சி அடைந்து கதறிய அவர்கள் சம்பவம் குறித்து சூரமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனே விரைந்து வந்த போலீசார் 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே ஆஸ்பத்திரியில் திரண்ட அவர்களது உறவினர்கள் 2 பேரின் உடல்களையும் பார்த்து கதறி அழுததால் ஆஸ்பத்திரி வளாகமே சோகத்தில் மூழ்கியது.
இந்த விபத்து குறித்து சூரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்கள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்ற வாகனத்தை தேடி வருகிறார்கள்.
கருத்துக்கள்