ரீல்ஸ் மோகத்தில் பதாகையை உடைத்த இளைஞர்கள் - மன்னிப்பு கேட்டு கதறல்
ஏற்காடு அருகே சாலையில் வைக்கப்பட்டிருந்த எச்சரிக்கை பலகைகளை சேதமாக்கி வீடியோ பதிவு செய்த இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.
தமிழ்நாட்டின் முக்கிய சுற்றுலா தலமான ஏற்காட்டில் கடந்த வாரம் 48ஆம் ஆண்டு கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி நடைபெற்றது. இந்த கோடை விழாவை காண தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து சென்றனர். அந்த நேரத்தில் ஏற்காட்டிற்கு இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர்கள் வாகனத்தை சாலையில் அதிவேகமாக இயக்கி வீலிங் சாகசம் செய்து, மலைப்பாதை சாலையில் நெடுஞ்சாலைத்துறையால் வைக்கப்பட்ட எச்சரிக்கை பலகைகளை பிடுங்கி வீசி வீடியோ பதிவு செய்தனர். இந்த சம்பவம் சக வாகன ஓட்டிகளை அச்சமடைய செய்தது.
மேலும், இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி ஏற்காடு போலீசார் கவனத்திற்கு வந்தது. இதையடுத்து காவல் ஆய்வாளர் வாசுகி தலைமையிலான போலீசார் சேலம் மாவட்ட சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் சமூக வலைத்தள முகவரியை வைத்து, இளைஞர்களை தீவிரமாக தேடி வந்தனர்.
அந்த விசாரணையில் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த ஆகாஷ், சிவா, பிரவீன், கார்த்திக், அரவிந்த் ஆகிய ஐந்து இளைஞர்களை ஏற்காடு காவல் துறையினர் கைது செய்தனர். மேலும் அவர்கள் வைத்திருந்த இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்.இதைத் தொடர்ந்து, இளைஞர்களின் பெற்றோர்கள் வரவழைக்கப்பட்டு ஐந்து பேரையும் எச்சரித்து காவல்துறையினர் பிணையில் விடுவித்தனர். மேலும் இந்த இளைஞர்கள் தற்போது காவல் நிலையத்திலிருந்து வீடியோ மூலம் ஒரு உறுதிமொழியையும் ஏற்றுக் கொண்டுள்ளனர். அந்த வீடியோவில் “பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தும் விதத்தில் வாகனத்தை இயக்குவதோ பொது இடங்களில் அருவருக்கத்தக்க வகையில் ரீல்ஸ் எடுத்து பதிவிடுவதோ சட்டப்படி குற்றமாகும்” என அவர்கள் அந்த வீடியோவில் தெரிவித்திருந்தனர்.
இதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில், “இளைஞர்கள் ரீல்ஸ் மோகத்தில் இதுபோன்ற ஆபத்தான செயல்களில் ஈடுபடுகின்றனர். இவ்வாறான செயல்களில் ஈடுபட்டால் வழக்குப்பதிவு செய்யும் பட்சத்தில் அவர்களது எதிர்காலம் கேள்விக்குறியாகிறது. எனவே இளைஞர்கள் இத்தகைய நடவடிக்கையில் ஈடுபடக் கூடாது” என தெரிவித்தனர்.





கருத்துக்கள்