திமுக பொய்யை அம்பலப்படுத்திய ரிசர்வ் வங்கி தரவு - அன்புமணி ராமதாஸ்
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தனியார் துறைகளில் 30 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டிருப்பதாக திமுக அரசு தொடர்ந்து தெரிவித்து வந்த தகவல்கள் பொய்யானவை என்பதை இந்திய ரிசர்வ் வங்கி இன்று வெளியிட்ட புள்ளிவிவரங்கள் அம்பலப்படுத்தியுள்ளன. தொழில் வளர்ச்சிக்காக துரும்பைக் கூட கிள்ளிப்போடாத திமுக அரசு தமிழகத்தில் வேலைவாய்ப்புகள் அதிகரித்து விட்டதாக பொய்யுரைத்து வருவது கண்டிக்கத்தக்கது.
திமுக ஆட்சியில் தமிழகத்திற்கு ரூ.11.32 லட்சம் கோடி முதலீடுகள் வந்ததாகவும், அதன் மூலம் 34 லட்சத்திற்கும் கூடுதலான வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டிருப்பதாகவும் அரசுத் தரப்பில் கூறப்பட்டு வந்த பொய்யை அம்பலப்படுத்தும் வகையில், திமுக அரசின் பொய் முதலீடுகள் என்ற தலைப்பிலான ஆவணத்தை நான் வெளியிட்டிருந்தேன். அதில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு நேரடியாக பதிலளிக்க முடியாத திமுக அரசு, தாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு 30 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டிருப்பதாக தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (EPF) தரவுகள் தெரிவிப்பதாக விளக்கமளித்திருந்தது. அதுவும் பொய் என்பது இப்போது அம்பலமாகியுள்ளது.
அதாவது திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் 3 ஆண்டுகளில் 728 தொழிற்சாலைகள் மட்டுமே புதிதாக உருவாக்கப்பட்டுள்ளன. இது வெறும் 1.85% வளர்ச்சி தான். அதேபோல், இந்த தொழிற்சாலைகளில் பணியாற்றுவோரின் எண்ணிக்கையும் 4.29 லட்சம் மட்டுமே அதிகரித்திருக்கிறது. இதில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் உருவாக்கப்பட்ட தொழிற்சாலைகள் மட்டுமின்றி, உள்ளூர் அளவில் சொந்த நிதியிலும், வங்கிக் கடன் மூலமாகவும் உருவாக்கப்பட்ட சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களும் அடங்கும்.
திமுக ஆட்சியில் தொழில்துறையில் வெறும் 4.29 லட்சம் பேருக்கு மட்டுமே வேலைவழங்கப்பட்டுள்ள நிலையில், 30 லட்சம் பேருக்கும் கூடுதலாக வேலை கிடைத்திருப்பதாக திமுக அரசு கூறி வருவது எவ்வளவு அப்பட்டமான பொய் என்பதை அனைவரும் அறிந்து கொள்ளலாம். அதேபோல் தமிழகத்தில் தொழிற்சாலைகளின் எண்ணிக்கை 52,614 ஆக உயர்ந்து விட்டதாக திமுக அரசு கூறி வந்த நிலையில், 2023-24ம் ஆண்டின் இறுதியில் தமிழகத்தில் இருந்த தொழிற்சாலைகளின் எண்ணிக்கை 40,121 மட்டும் தான் என்பதையும் ரிசர்வ் வங்கி அம்பலப்படுத்தியுள்ளது.
தொழில் முதலீடுகள், தமிழ்நாட்டின் வளர்ச்சி ஆகியவை சார்ந்த விஷயங்களில் திமுக அரசு கூறுவதெல்லாம் பொய் தான் என்பதை ரிசர்வ் வங்கி தரவுகள் நிரூபித்துள்ளன. கடந்த நான்கரை ஆண்டுகளாக பொய்களை மட்டுமே கூறி மக்களை ஏமாற்றி வந்த திமுக அரசுக்கு வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் மறக்க முடியாத பாடத்தை புகட்டுவார்கள். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.





கருத்துக்கள்