advertisement

திருவனந்தபுரம் மாநகராட்சியை கைப்பற்றிய பாஜக

டிச. 14, 2025 3:56 முற்பகல் |

 

கேரள மாநிலத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் திருவனந்தபுரம் மாநகராட்சியை முதன் முறையாக பாஜக கூட்டணி கைப்பற்றியுள்ளது. மேலும், உள்ளாட்சி தேர்தலில் பெரும்பாலான இடங்களில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி வெற்றி பெற்றுள்ளது.

கேரளாவில் உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த சில நாட்களுக்கு முன் நடைபெற்றது. இந்த தேர்தலில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி மற்றும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி என மும்முனைப் போட்டி நிலவியது.

உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை மாநிலம் முழுவதும் தொடங்கியது. இதில் ஆரம்பம் முதலே காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி பல பகுதிகளில் தொடர்ந்து முன்னிலை பெற்று வந்தது.

மாநிலத்தின் தலைநகரமான திருவனந்தபுரம் மாநகராட்சியில் மொத்தம் 101 வார்டுகள் உள்ளன. இதில் விழிஞ்ஞம் என்ற வார்டில் மட்டும் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டது. மற்ற 100 வார்டுகளிலும் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. 50 வார்டுகளை கைப்பற்றினால் மேயர் பதவி என்ற நிலையில், வாக்கு எண்ணிக்கையில் ஆரம்பம் முதலே பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி முன்னிலை பெற்று வந்தது. மாலை 5 மணி நிலவரப்படி பாஜக கூட்டணி 51-க்கும் அதிகமான வார்டுகளை கைப்பற்றி வெற்றி பெற்று புதிய சாதனை படைத்தது.

திருவனந்தபுரம் மாநகராட்சியில் கடந்த 45 ஆண்டுகளாக தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி வெற்றி பெற்று, மாநகராட்சியை நிர்வகித்து வந்தது. இந்த நிலையில், இந்த முறை திருவனந்தபுரம் மாநகராட்சியை பாஜகவிடம் பறிகொடுத்துள்ளது.

திருவனந்தபுரம் மாநகராட்சியில் 2010-ல் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் 6 வார்டுகளில் மட்டுமே பாஜக வெற்றி பெற்றிருந்தது. 2015-ல் பாஜக கூட்டணியின் பலம் 34 ஆக உயர்ந்தது. கடந்த மக்களவைத் தேர்தலில் திருச்சூரில் பாஜக சார்பில் நடிகர் சுரேஷ் கோபி வெற்றி பெற்றார். இந்த நிலையில் திருவனந்தபுரம் மாநகராட்சியை பாஜக கூட்டணி கைப்பற்றியுள்ளது.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement