சவுக்கு சங்கருக்கு டிச.26 வரை நீதிமன்றக் காவல்
சினிமா தயாரிப்பாளர் ஒருவரை மிரட்டி பணம் பறித்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்ட யூடியூபர் சவுக்கு சங்கரை வருகிற 26-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சினிமா தயாரிப்பாளர் ஒருவரை மிரட்டி ரூ. 2 லட்சம் பணம் பறித்ததாக சவுக்கு சங்கரை நேற்று சென்னை பல்லாவரம் ரேடியல் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில், 14-வது மாடியில் உள்ள யூடியுபர் சவுக்கு சங்கர் இல்லத்தை சுற்றி வளைத்தனர். அப்போது, அவர் வீட்டின் கதவை திறக்காததால், தீயணைப்பு படையினர் உதவியுடன் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று சவுக்கு சங்கர் மற்றும் அவரது செல்போன், லேப்டாப் ஆவணங்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர்.
தொடர்ந்து, அவரை கைது செய்த போலீசார், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்துச் சென்றனர். அப்போது , திமுக அரசுக்கு எதிராகவும், காவல்துறைக்கு எதிராகவும் கோஷம் எழுப்பினார். இதற்கிடையில், போலீஸ் தன்னை கைது செய்ய வருவதை அறிந்த சவுக்கு சங்கர், வீட்டில் இருந்தபோது வீடியோ ஒன்றை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, மடிப்பாக்கம் காவல் நிலையத்தில் விசாரணை நடத்தப்பட்டு, சைதாப்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சவுக்கு சங்கரை மருத்துவ பரிசோதனைக்காக போலீசார் அழைத்துச் சென்றனர். அதன் பிறகு, சவுக்கு சங்கரை சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் போலீசார் ஆஜர்படுத்தினர். இதையடுத்து, வருகிற 26 ஆம் தேதி வரை சவுக்கு சங்கரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி அனிதா ஆனந்த் உத்தரவிட்டார். இதன்பேரில், போலீசார் அவரை சிறையில் அடைத்தனர்.





கருத்துக்கள்