ரத்னபுரியில் இலவச எண்டோஸ்கோபி பரிசோதனை முகாம்
சமூக சுகாதார சேவைகளில் ஒரு முக்கிய மைல்கல்லாக, எல்சி மருத்துவ அறக்கட்டளை தனது 50வது இலவச எண்டோஸ்கோபி பரிசோதனை முகாமை இன்று ரத்னபுரியில் உள்ள ஸ்ரீ லாலா மஹால் வளாகத்தில் வெற்றிகரமாக நடத்தியது. அனைத்து மத ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை வலியுறுத்தும் பல் சமய நல்லுறவு இயக்கம் அமைப்புடன் இணைந்து எல்சி மருத்துவ அறக்கட்டளை இம்முகாமை ஏற்பாடு செய்துள்ளது.
இந்த முகாமின் மூலம் பலரும் பயன் அடைந்தனர். நோயாளிகளுக்கு இலவச எண்டோஸ்கோபி பரிசோதனைகளும் மருத்துவ ஆலோசனைகளும் வழங்கப்பட்டன. குடலியல் மற்றும் மகப்பேறு சார்ந்த பிரச்சினைகள் குறித்து, இரு துறைகளையும் சேர்ந்த 6 சிறப்பு மருத்துவர்களை உள்ளடக்கிய 30 உறுப்பினர்கள் கொண்ட மருத்துவ குழு சேவையாற்றியது.பேரூர் ஆதீனம் தவத்திரு மருதாசல அடிகளார் அவர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்று தமது அருளாசியால் விழாவிற்கு சிறப்புச் சேர்த்தார்.
எல்சி மருத்துவ அறக்கட்டளையின் தலைவர் மற்றும் முதன்மை அறுவை சிகிச்சையாளர் டாக்டர் பி. எஸ். ராஜன் அவர்கள் உரையாற்றி, எண்டோஸ்கோபி பரிசோதனையின் அவசியம், குறிப்பாக புற்றுநோய்கள் உள்ளிட்ட கடுமையான குடல் நோய்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து தடுப்பதில் அதன் முக்கிய பங்கு குறித்து விளக்கினார். பல்வேறு மத மற்றும் அரசியல் பிரமுகர்கள் கலந்துகொண்ட இந்நிகழ்வை பல் சமய நல்லுறவு இயக்கம் நிறுவனர். முகமது ரஃபீக் அவர்கள் ஒருங்கிணைத்து துவக்கி வைத்தார். அவருடைய குழுவினரும் இம்முயற்சிக்கு முழு ஆதரவை வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில் பேசிய எல்சி மருத்துவ அறக்கட்டளையின் தாளாளர் டாக்டர் வித்யா ராஜன், இந்த 50வது முகாம், அறக்கட்டளையின் ஆரம்ப கால முகாம்களில் தன்னலமற்ற சேவையும் மதிப்புமிக்க ஆதரவையும் வழங்கிய மரணமடைந்த மறைந்த அரிமா. ஈஸ்வரமூர்த்தி நினைவாக அர்ப்பணிக்கப்பட்டதாக தெரிவித்தார்.இந்த நினைவுக்குரிய முகாமின் வெற்றிகரமான நிறைவு, விழிப்புணர்வு சார்ந்த சுகாதார சேவைகளை தொடர்ந்து வழங்கும் எல்சி மருத்துவ அறக்கட்டளையின் உறுதியான அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.






கருத்துக்கள்