advertisement

மறைந்த ரோபோ சங்கருக்கு மதியம் இறுதிச்சடங்கு

செப். 19, 2025 2:30 முற்பகல் |

 


டி.வி.யில் ஒளிபரப்பான நகைச்சுவை நிகழ்ச்சிகள் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த ரோபோ சங்கர், பின்னாளில் ‘தீபாவளி' திரைப்படத்தின் மூலம் வெள்ளி திரைக்கு வந்தார். ‘மாரி', ‘விஸ்வாசம்' உள்ளிட்ட பல்வேறு படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்து வந்த அவர், பின்னர் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் கலக்கத் தொடங்கினார்.

ஓரிரு நாட்களுக்கு முன்பாக சென்னையில் படப்பிடிப்பில் இருந்தபோது ரோபோ சங்கர் மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை பெருங்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். நீர்ச்சத்து குறைபாடு மற்றும் ரத்த அழுத்தம் காரணமாக அவர் மயங்கி விழுந்தது தெரியவந்தது. தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இதற்கிடையில் அவரது உடல்நிலை நேற்று மோசம் அடைந்தது. ‘வெண்டிலேட்டர்’ கருவியுடன் டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு அவர் உயிரிழந்தார். அவருக்கு வயது 46. ரோபோ சங்கரின் மறைவு செய்தியை கேட்டு அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். ரோபோ சங்கரின் மறைவு திரை உலகில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

சென்னை, வளசரவாக்கம் பகுதியில் நடிகர் ரோபோ சங்கரின் வீடு உள்ளது. அவரது உடல், பொதுமக்கள் அஞ்சலிக்காகவும், பிரபலங்களின் அஞ்சலிக்காகவும் அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று மதியம் நடிகர் ரோபோ சங்கரின் இறுதிச்சடங்குகள் நடைபெறும் என தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement