சர்வதேச கைக்கூலியா நான் ? பாலா விளக்கம்!
நகைச்சுவை நடிகர் மற்றும் தொகுப்பாளர் KPY பாலா மீது பத்திரிகையாளர் உமாபதி, ஒரு யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். பாலா வெளிநாட்டு சக்திகளின் கைக்கூலியாக செயல்படுவதாகவும், அவர் வழங்கிய ஆம்புலன்ஸ்கள் போலியானவை மற்றும் இன்சூரன்ஸ் இல்லாதவை என்றும் கூறினார். மேலும், பாலாவுக்கு பின்னால் சர்வதேச வில்லன்கள் இருப்பதாகவும் உமாபதி விமர்சித்தார்.
இந்த பேட்டி, சமூக ஊடகங்களில் வைரலாகி, பாலாவின் சமூக சேவைகளை பாராட்டி வந்த ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பாலாவின் உதவிகள் குறித்து பரவும் விமர்சனங்கள், அவரது பிம்பத்தை கேள்விக்குள்ளாக்கியுள்ளன.இந்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த KPY பாலா, செய்யாறு பாலு என்ற பத்திரிகையாளருக்கு அளித்த பேட்டியில் தனது தரப்பை தெளிவுபடுத்தினார். அதனைத்தொடர்ந்து இப்போது வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தனது வீடியோவில் அவர் கூறியதாவது “ஆம்புலன்ஸ் நம்பர் பிளேட்டில் ஒரு சிறிய எழுத்துப் பிழை இருந்தது உண்மை. அதை உடனே கண்டறிந்து, மற்றொரு ஆம்புலன்ஸை வழங்கிவிட்டேன். இந்த ஆம்புலன்ஸ்கள் மூலம் பல குழந்தைகளின் உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன, ஆனால் இந்த நல்ல செயல்களை யாரும் பேசுவதில்லை,” என்று கூறினார். அவர், தனது காரை சொந்த உழைப்பில் வாங்கியதாகவும், அது போலியான எண்ணுடன் இல்லை என்றும் தெளிவுபடுத்தினார். “நான் ஒரே ஒரு படத்தில் நடித்தேன். அதற்காக இவ்வளவு வன்மத்துடன் விமர்சிப்பார்கள் என்று எதிர்பார்க்கவில்லை,” என்று உருக்கமாக பகிர்ந்தார்.“என்னை சர்வதேச கைக்கூலி என்கிறார்கள்.
ஆனால் நான் தினக்கூலி. ‘கலக்கப்போவது யாரு’, நிகழ்ச்சி தொகுப்பு, விளம்பரங்கள், இன்ஸ்டாகிராம் புரமோஷன்கள், வெளிநாட்டு நிகழ்ச்சிகள் மூலம் சம்பாதித்த பணத்தில் மட்டுமே உதவிகள் செய்கிறேன். வெளிநாட்டு பணம் என்று எதுவும் இல்லை. என்னிடம் அறக்கட்டளை இல்லை, மக்களிடம் நிதி திரட்டவும் இல்லை,” என்று பாலா விளக்கினார்.
அதனைத்தொடர்ந்து “மக்கள் எனக்கு துணையாக இருக்கும் வரை, எவ்வளவு விமர்சனங்கள் வந்தாலும் சேவையை நிறுத்த மாட்டேன். இந்த வீடியோவை வெளியிடுவதற்கு காரணம், என்னைப் பார்த்து உதவி செய்யும் மற்றவர்கள் பயப்படக் கூடாது என்பதற்காகவே,” என்று பாலா உறுதியளித்தார்.நச
கருத்துக்கள்