ராமநாதபுரம் வளர்ச்சித் திட்டப் பணிகளை ஆட்சியர் ஆய்வு
ராமநாதபுரம் ,ராமேஸ்வரம் பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சிவகுரு பிரபாகரன் பார்வையிட்டு ஆய்வு செய்தார் .
ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் , ராமோய்வரம் பகுதிகளில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சிவகுரு பிரபாகரன் பல்வேறு பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பாம்பன் பகுதியில் குடிநீர் பற்றாக்குறையைப் போக்கும் வகையில், தமிழ்நாடு குடி வடிகால் வாரியத்தின் மூலம் கூடுதல் குடிநீரைக் கொண்டு செல்வதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு செய்தார்.
பாம்பன் பாலம் பகுதியில் காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் குழாய்ப் பாதையை பார்வையிட்ட அவர், ராமநாதபுரம் நோக்கி ராமேஸ்வரம் செல்லும் திசையில், பாம்பன் பாலத்தின் வலது புறத்தில் அமைந்துள்ள குழாய் பாதையின் தற்போதைய நிலை குறித்து கேட்டறிந்தார். மேலும், பழைய குடிநீர் குழாய்களில் எவ்வித கசிவும் ஏற்படாதவாறு உரிய முறையில் பராமரித்து, குடிநீர் விநியோகத்தில் எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்யுமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களை அறிவுறுத்தியதுடன்
தொடர்ந்து , கரூர் புதிய குடிநீர் வழங்கல் திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள், திட்டத்தின் தற்போதைய நிலை , கூடுதல் குடிநீரைக் கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகள் குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.
குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் பகுதிகளில் பொதுமக்களுக்கு சீரான குடிநீர் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் தேவையான நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டும் என்றும், குடிநீர் குழாய்களில் ஏற்படும் கசிவுகள் , தொழில்நுட்பக் கோளாறுகளை உடனுக்குடன் சரிசெய்ய வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவுறுத்தினார்.
தொடர்ந்து, ராமேஸ்வரம் சௌந்தரி அம்மன் கோயில் தெருவில் ரூ.25 கோடி மதிப்பீட்டில் சுட்டப்பட்டு வரும் கேந்திரிய வித்யாலயா பள்ளி கட்டடப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, பள்ளி கட்டடத்தின் கட்டமைப்பு பணிகளின் தற்போதைய நிலை, பணிகளின் முன்னேற்றம் , மேற்கொள்ளப்பட வேண்டிய அடுத்தகட்ட பணிகள் குறித்து சம்பந்குப்பட்ட அலுவலர்களிடம் கேட்டறிந்தார். பள்ளி கட்டடப் பணிகளை மேலும் துரிதப்படுத்துவதுடன், பணிகளை விரைந்து மேற்கொண்டு, நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் கட்டுமானப் பணிகளை நிறைவு செய்ய வேண்டும் என சம்பந்தப்பட்ட அலுவலர்களை அறிவுறுத்தினார்.
ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் ஊராட்சி ஒன்றியம், புதுமடம் , கும்பரம் ஊராட்சிகளில் மாவட்ட ஆட்சித்தலைவர் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கைகள் புகார்களின் அடிப்படையில் பல்வேறு பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்
அதனைத் தொடர்ந்து , புதுமடம் ஊராட்சியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், நபார்டு நிதியுதவித் திட்டத்தின் கீழ் ரூ.249.42 இலட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டுள்ள 10 வகுப்பறைகள் கொண்ட புதிய கட்டடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்ததுடன், பள்ளி வளாகத்தில் சுற்றுச்சுவர் அமைப்பதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும் , கட்டடப் பணிகளின் தற்போதைய நிலை , மாணவியர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் குறித்து சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து, புதுமடம் கிளை நூலகத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தற்போது புதுமடம் கிளை நூலகம் அவர்ணா மறுமலர்ச்சி கிளை நூலகக் கட்டடத்தில் செயல்பட்டு வருகிறது. இக்கட்டடத்தில் போதுமான இடவசதி இல்லாத காரணத்தால், பொதுமக்கள் , வாசகர்களின் பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் புதிய கிளை நூலகக் கட்டடம் அமைப்பதற்கான இடம் தேர்வு செய்வது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து, கும்பரம் ஊராட்சியில் பொதுமக்கள் அளித்த புகாரின் அடிப்படையில், பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள வீட்டினை பார்வையிட்டு ஆய்வு செய்தார். சம்பந்தப்பட்ட பயனாளிக்கு வீட்டைக் கட்டுவதற்கான திட்டத் தொகை 2022 , 2023-ஆம் ஆண்டுகளில் உரிய முறையில் வழங்கப்பட்டுள்ளதா என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டதுடன், சம்பந்தப்பட்ட வீட்டிற்கான திட்டத் தொகை 2022 , 2023ஆம் ஆண்டுகளில் வழங்கப்பட்டுள்ளதுடன், நிலுவைத் தொகை எதுவும் இல்லை என்பதும் தெரியவந்தது. மேலும், அரசின் குடியிருப்புத் திட்டங்களின் கீழ் வழங்கப்படும் உதவிகள் தகுதியான பயனாளிகளுக்கு உரிய முறையில் சென்றடையதை அலுவலர்கள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சிவகுரு பிரபாகரன் அறிவுறுத்தினார்.
ஆய்வுகளின்போது , ராமேஸ்வரம் வட்டாட்சியர்கள் முரளிதரன் , அப்துல் ஐபார் , ராமேஸ்வரம் நகராட்சி ஆணையர் ஆண்டவர் , ராமேஸ்வரம் நகராட்சி உதவி பொறியாளர் ஹரி கார்த்திக் , ராமநாதபுரம் வட்டாட்சியர் காளீஸ்வரன் , மண்டபம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அன்பு கண்ணன் , கோட்டை இளங்கோவன் , செய்தி - மக்கள் தொடர்பு மாவட்ட அலுவலர் சி.சாலி தளபதி உள்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
மாமுஜெயக்குமார்.
மாவட்ட செய்தியாளர்.





கருத்துக்கள்