சினையுற்ற பசுக்களுக்கு மானியத்துடன் ஊட்டச்சத்து வழங்கும் திட்டம் - ராமநாதபுரம் ஆட்சியர் தகவல்
திருவாடானை முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றியங்களில் ஊரக ஏழை கால்நடை விவசாயிகளின் சினையுற்ற கறவை பசுக்களுக்கு மானியத்துடன் ஊட்டச்சத்து வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளதென ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தகவல் தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவித்ததாவது :தமிழ்நாடு முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ் ராமநாதபுரம் மண்டலத்தில் தேர்வு செய்யப்பட்ட திருவாடானை , முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றியங்களில் 2025-26-ம் ஆண்டில் ஊரக ஏழை கால்நடை விவசாயிகளின் சினையுற்ற கறவை பசுக்களுக்கு 50 சதவீத மானியத்துடன் "ஊட்டச்சத்து வழங்கும் திட்டம்" செயல்படுத்தப்படவுள்ளது. திட்டத்தின் நோக்கம் :சினையுற்ற கறவைப்பசுக்களின் உடல்நலத்தையும், உற்பத்தித் திறனையும் மேம்படுத்தும் வகையில், சத்தான தீவனம் மற்றும் தாது உப்பு மானிய விலையில் வழங்குதல்.
பயனாளிகள் :ராமநாதபுரம் மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினராகப் பதிவு செய்து, உள்ளூர் சங்கத்தில் தொடர்ந்து பால் ஊற்றும் சினையுற்ற கறவைப்பசுக்களின் உரிமையாளர்கள் இத்திட்டத்தில் பயனாளிகளாகத் தேர்வு செய்யப்படுவர்.வழங்கப்படும் ஊட்டச்சத்து :இத் திட்டத்தின்கீழ், சினையுற்ற ஒவ்வொரு பசுவிற்கும், 4 மாதங்களுக்கு தினமும் 3 கிலோ வீதம் 360 கிலோ சமச்சீர் தீவனமும், ஒரு மாதத்திற்கு 1 கிலோ வீதம் 4 மாதங்களுக்கு 4 கிலோ தாது உப்பு மற்றும் வைட்டமின் இணைத்தீவனமும் 50 சதவீத மானிய விலையில் வழங்கப்படும்.
முன்னுரிமை :பயனாளிகளில் 30 சதவீதம் பேர் ஆதிதிராவிடர் , பழங்குடியினராக இருக்க வேண்டும். மேலும், மகளிர், ஆதரவற்றோர், விதவைகள் , மாற்றுத்திறனாளிகளுக்கு இத்திட்டத்தில் சேர முன்னுரிமை அளிக்கப்படும்.இத் திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் பொதுமக்கள் அருகில் உள்ள கால்நடை மருந்தக, கால்நடை உதவி மருத்துவர் அல்லது பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தை அணுகி விண்ணப்பங்களை அளிக்கலாம் என ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
மாமுஜெயக்குமார்.
மாவட்ட செய்தியாளர்.
கருத்துக்கள்