advertisement

மாணாக்கர்களுக்குள் அறிவுத்தீ கொளுந்து விட்டு எரிய வேண்டும் -ஜி.எஸ்.டி.உதவி ஆணையர் அறிவுரை

ஜூலை 16, 2025 7:54 முற்பகல் |

வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டு மென்றால் மாணாக்கர்களுக்குள் அறிவுத்தீ கொளுந்து விட்டு எரிய வேண்டும் என சென்ட்ரல் ஜி.எஸ்.டி.உதவி ஆணையர் ஆர்.மணி மோகன் அறிவுரை வழங்கினார்.

கோவை நவ இந்தியா பகுதியில் செயல்பட்டு வரும் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை , அறிவியல் கல்லூரியில், 2025-26-ம் கல்வியாண்டு முதுநிலை பட்டப்படிப்புகளில் சேர்ந்துள்ள முதலாமாண்டு மாணவர் - மாணவியர்களுக்கு வரவேற்பு விழா கல்லூரி கலையரங்கில்  நடைபெற்றது. விழாவிற்கு எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் ஆர்.சுந்தர்  தலைமை தாங்கினார். ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை , அறிவியல் கல்லூரி முதல்வர்  - செயலர் , முனைவர் பி.எல்.சிவக்குமார் வரவேற்றுப் பேசி, கல்லூரிகளின் சிறப்புகளை எடுத்துக்கூறி, துறைத்தலைவர் பெருமக்களை அறிமுகம் செய்து வைத்தார்.கோயம்புத்தூர் சென்ட்ரல் ஜி.எஸ்.டி. வரி ஏய்ப்பு தடுப்புப்பிரிவு உதவி ஆணையர் ஆர்.மணிமோகன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு எழுச்சியுரை ஆற்றியதாவது : 

“நாம் உலகில் எங்கு சென்றாலும் நம்முடைய எதிர்காலம் மிகவும் முக்கியமானது. நமக்கு அறிவுரை கூறுபவர்களைப் பிடிக்காது. அதைக் கேட்பவர்கள் தான் நன்மை அடைவார்கள். கல்வி இல்லாமல் நம்மால் அடுத்தக் கட்டத்திற்குச் செல்ல முடியாது. கல்வி கற்கும் காலக்கட்டம் என்பது மிகவும் முக்கியமானது. 
24 மணி நேரத்தில் கல்லூரிக்கு வரும் நேரம், உறங்கும் நேரம் தவிர்த்து, மீதமுள்ள 8 மணி நேரம் மிகவும் முக்கியமானது. இந்த நேரத்தைப் பயன்படுத்துபவர்களே வாழ்க்கையில் வெற்றி பெற இயலும். இதை தவிர்த்து சமூக ஊடகங்களில் மூழ்கிக் கிடந்தால் நேரம் வீணாகுவதுடன், உங்கள் வாழ்க்கையும் கேள்விக்குறியாகி விடும். 
ஆசிரிய பெருமக்கள் உங்களுக்குள் அறிவைக் கொளுத்தி விடுவார்கள். 

மாணவர் - மாணவியர்கள் தான் கொளுந்து விட்டு எரிய வேண்டும். கற்றுக் கொள்ள வேண்டும் என்ற உத்வேகம் மாணவர் - மாணவியர்களுக்கு உருவாக வேண்டும். பாடத்தைக் கடந்த உலக அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும். எப்போதும் ஒரு துறையைச் சேர்ந்தவர்களாக இருப்பது நன்மை பயக்காது. மற்றொரு துறையில் வாய்ப்புக் கிடைத்தாலும் ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்க வேண்டும்” என எழுச்சியுரை ஆற்றினார்.
விழாவில் , முதுநிலை பட்டப்படிப்பு மாணவர், மாணவியர்கள், பெற்றோர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.   மேலாண்மைத்துறை இயக்குநர் முனைவர் என்.பிரேம் ஆனந்த் நன்றி கூறினார்.

மாமுஜெயக்குமார்.
சிறப்பு செய்தியாளர்.
 

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement