தூத்துக்குடி மாவட்டத்தில் ஆயுதங்களுடன் சுற்றித்திரிவோர் மீது நடவடிக்கை-காவல்துறை அறிவிப்பு
தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்கள், ரவுடித்தனம் செய்பவர்கள், அரிவாள், வாள் போன்ற ஆயுதங்களுடன் சுற்றித்திரிபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை என மாவட்ட காவல்துறை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் வாள், அரிவாள் போன்ற ஆயுதங்களை வைத்துக்கொண்டு பொதுமக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படும் வகையிலோ அல்லது பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் சுற்றித்திரிந்தாலோ, பொதுமக்களை அச்சுறுத்தி தீங்கு அல்லது காயங்களை ஏற்படுத்தினாலோ ஆயுத சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.மேலும் சட்ட விரோதமாக ஆயுதங்களை தயாரிப்பவர்கள் மற்றும் விற்பவர்கள் மீது மேற்படி ஆயுதச் சட்டம் 1959ன் படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதேபோன்று சமூக வலைதளங்களில் ஆயுதங்களை வைத்துக்கொண்டு ரீல்ஸ் அல்லது புகைப்படத்தை பதிவேற்றம் செய்வது போன்ற செயல்களில் ஈடுபட்டு பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துவது அல்லது மோதல்களை உண்டாக்குவது போன்ற செயல்களில் ஈடுபட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாவட்ட காவல்துறை தெரிவித்துக் கொள்கிறது.
தூத்துக்குடி மாவட்டத்தில் இவ்வாண்டு இதுவரை, ஆயுதங்களுடன் சுற்றிதிரிந்து ரவுடித்தனம் செய்தல் மற்றும் பொதுமக்களை அச்சுறுத்துதல் போன்ற செயல்களில் ஈடுபட்ட குற்றத்திற்காக ஆயுதச் சட்டத்தின் படி 97 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 187 எதிரிகள் மீது நடடிவக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில், குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு ஏற்கனவே வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நபர்களின் நடவடிக்கைகள் தொடர்ந்து காவல்துறையினரால் கண்காணிக்கப்பட்டு வருகிறது என்றும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
தூத்துக்குடி மாவட்டத்தில் எவரேனும் வாள், அரிவாள் போன்ற ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்து பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தினாலோ அல்லது ரவுடித்தனத்தில் ஈடுபட்டாலோ மாவட்ட காவல் அலுவலக எண் 0461 2340700, 9498101830 மற்றும் மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 0461 2340393 ஆகிய எண்களுக்கு பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம், தகவல் தெரிவிப்பவர்கள் விபரங்கள் இரகசியமாக வைக்கப்படும் என மாவட்ட காவல்துறை சார்பாக தெரிவித்துள்ளது.
கருத்துக்கள்