திருச்சியில் செவிலியர் தாக்கப்பட்ட சம்பவம் - செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் கடும் கண்டனம்
திருச்சி மாவட்டம், லால்குடி அருகே உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியராக பணியாற்றி வரும், 40 வயது பெண் ஒருவர், கடந்த அக்., 31ம் தேதி மாலை, பணி முடிந்து வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.இதில் சிலுவைப்பட்டி அருகே சென்றபோது, கல்லக்குடி அருகே உள்ள மால்வாய் கிராமத்தைச் சேர்ந்த கோகுல், 24, என்பவர் செவிலியரை வழிமறித்து பலாத்காரம் செய்ய முயன்றார்.
அதிர்ச்சியடைந்த செவிலியர் சத்தம் போட்டதும், அந்த வழியாக சென்றவர்கள், செவிலியரை காப்பாற்றி, லால்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.செவிலியர் புகாரின்படி, கல்லக்குடி போலீசார் ஐந்து பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து, கோகுலை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.இதை கண்டித்து தமிழ்நாடு எம்.ஆர்.பி., செவிலியர்கள் மேம்பாட்டு சங்க பொதுச்செயலர் சுபின் கூறியதாவது:
தமிழகத்தில் உள்ள பெரும்பாலான அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் இரவில் டாக்டர்கள் இல்லாமல் செவிலியர்கள் சிகிச்சை அளிக்கும் நிலையுள்ளது.அப்போது, சமூக விரோதிகளால் செவிலியர்கள் பல்வேறு தாக்குதலுக்கு ஆளாகுவது தொடர் கதையாக உள்ளது.மருத்துவமனை பாதுகாப்பு சட்டம் இருந்தும் அசாம்பாவிதம் நடக்கும்போது நிர்வாகத்தினர் சட்ட நடவடிக்கை எடுப்பதில் மெத்தனம் காட்டுகின்றனர். 24 மணி நேரம் செயல்படும் அரசு மருத்துவமனைகளில் செவிலியர்கள், ஊழியர்களை பாதுகாக்க இரவு காவலர்களை நியமிக்க வேண்டும்.சுகாதார நிலையங்களில் சுற்றுச்சுவர் அமைத்து 'சிசிடிவி' கேமராக்கள் செயல்படுவதை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.குற்றச்சம்பவங்கள் நடக்காதபடி, சட்ட ரீதியான நடவடிக்கைகளை உடனடியாக எடுப்பதை மருத்துவத்துறை நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
கருத்துக்கள்