advertisement

நெல்லையில்  ஆளுனரிடம் பட்டம் பெற மாணவி மறுப்பு

ஆக. 13, 2025 9:11 முற்பகல் |

 

கவர்னர் ஆர்.என்.ரவியை புறக்கணித்து, துணைவேந்தரிடம் மாணவி பட்டத்தைப் பெற்றுக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 32-வது பட்டமளிப்பு விழா இன்று காலை நடைபெற்றது. இதில், தமிழக கவர்னரும், பல்கலைக்கழக வேந்தருமான ஆர்.என்.ரவி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். விழாவில், 650 மாணவ-மாணவிகள் பட்டம் பெற்றனர்.தங்களுக்கான பட்டத்தை கையில் வைத்துக்கொண்டு மேடைக்கு வந்த ஒவ்வொருவரும் கவர்னரிடம் அதைக் காண்பித்து வாழ்த்து பெற்று புகைப்படம் எடுத்துக்கொண்டனர். அருகில், பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் என்.சந்திரசேகர் இருந்தார்.

அப்போது, ஆராய்ச்சிக்காக பட்டம் பெற வந்த நாகர்கோவிலை சேர்ந்த ஜுன் ஜோசப் என்ற மாணவி, கவர்னர் ஆர்.என்.ரவியிடம் பட்டத்தை காட்டி வாழ்த்து பெறாமல் துணை வேந்தர் சந்திரசேகரிடம் காட்டி வாழ்த்து பெற்றுவிட்டு மேடையில் இருந்து இறங்கி சென்றார்.இதனால், கவர்னர் ஆர்.என்.ரவி மட்டுமல்லாது, விழா மேடையில் இருந்தவர்களும், பட்டம் பெற வந்த மாணவ-மாணவிகளும் அதிர்ச்சி அடைந்தனர்.

கவர்னர் ஆர்.என்.ரவியிடம் பட்டம் பெறுவதை தவிர்த்த மாணவி ஜுன் ஜோசப் நிருபர்களிடம் கூறும் போது, "கவர்னர் ஆர்.என்.ரவி தமிழ்நாட்டுக்கும், தமிழர்களுக்கும் எதிராக செயல்பட்டு வருகிறார். அதனால் அவரிடம் பட்டம் பெற விரும்பவில்லை" என்று கருத்து தெரிவித்தார். இதனால், பட்டமளிப்பு விழாவில் பரபரப்பு ஏற்பட்டது.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement