advertisement

புத்தகத் திருவிழாவில் புகைப்படப் போட்டி: தூத்துக்குடி ஆட்சியர் அறிவிப்பு

ஆக. 13, 2025 11:12 முற்பகல் |

 

தூத்துக்குடியில் நடைபெறும் ஆறாவது புத்தகத் திருவிழாவில் ஆக.14 முதல் 21 வரை புகைப்படப் போட்டி நடைபெறவுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக ஆட்சியர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "தூத்துக்குடி மாவட்ட புத்தகத் திருவிழா செயலாக்க குழு மற்றும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்துடன் இணைந்து தூத்துக்குடி மாவட்டத்தில், ”ஆறாவது புத்தகத் திருவிழா 2025” தூத்துக்குடி தருவை மைதானத்தில் வைத்து 22.08.2025 முதல் 31.08.2025 வரை 10 நாட்கள் நடைபெறவுள்ளது.

மேற்படி புத்தக திருவிழாவில் தூத்துக்குடி மாவட்ட புகைப்பட கலைஞர்கள் மற்றும் பொதுமக்களுக்கான புகைப்பட போட்டி நடத்தப்பட உள்ளது. புகைப்பட கண்காட்சிக்காக தருவை மைதானத்தில் தனி அரங்கு அமைக்கப்பட உள்ளது.

மேற்படி புத்தகத் திருவிழாவில் தூத்துக்குடியின் கலாச்சாரம், பாரம்பரியம், தெரு வாழ்க்கை, மதத்திருவிழாக்கள், நினைவுச் சின்னங்கள், மக்கள் வாழ்க்கை முறை, மீனவ சமூகத்தின் வாழ்க்கை, தூத்துக்குடி இயற்கை காட்சிகள் (கடற்பரப்புக்கள் நதிக்காட்சிகள், ஈர நிலங்கள், நகர்புற காட்சிகள்) வனவிலங்குகள் மற்றும் ஈரநில பறவைகள், தொழிலாளர்கள் (தொழில்துறை, மீன்பிடித்தல்,), விளையாட்டு போன்ற புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட உள்ளன. மேற்படி புகைப்படங்கள் கீழ்க்காணும் விதிமுறைகளைப் பின்பற்றி பொதுமக்கள் விண்ணப்பிக்கலாம்.

புகைப்படங்கள் தூத்துக்குடி மாவட்டத்தைச் சார்ந்த படங்களாக மட்டுமே இருக்க வேண்டும். இந்தியாவிலிருந்து எந்த வயதினரும் விண்ணப்பிக்கலாம். ஒரு விண்ணப்பதாரர் அதிகபட்சம் ஐந்து படங்களை சமர்ப்பிக்கலாம். விண்ணப்பதாரர் தனது சொந்த படங்களை மட்டுமே அனுப்ப வேண்டும். கிராபிக்ஸ் மற்றும் AI (Artificial Inteligence) உருவாக்கிய படங்கள் அனுமதிக்கப் படமாட்டாது.

மேலும், புகைப்படங்களை ஆன்லைன் மூலம் சமர்ப்பிக்கப்பட வேண்டும். மேற்படிபடங்கள் 100 dpi (dots per inch) இல் நீண்ட பக்கத்தில் 3000 பிக்சல்கள் (pixel) கொண்ட RGB (Red Green Blue) கோப்புகளில் இருக்க வேண்டும்.

மேற்படி புகைப்படங்களை கருப்பு வெள்ளை புகைப்படங்களாக அனுப்பலாம். ஒவ்வொரு புகைப்படமும் புகைப்படத்திற்கான தலைப்புடன் இருக்க வேண்டும். ஒவ்வொரு புகைப்படமும் குறைந்தபட்சம் 5 MB க்கு குறைவாக இருத்தல் வேண்டும். புகைப்பட கண்காட்சியில் வெற்றி பெற்ற போட்டியாளர்கள் முழுதெளிவுத் திறன்கொண்ட RAW / TIFF படங்களை அச்சிடுவதற்கும் / உண்மை தன்மையினை அறிவதற்கும் சமர்ப்பிக்கும்படி கேட்கபடுவார்கள். மேற்படி புகைப்படங்களில் பார்டர்கள் / வாட்டர் மார்க்க்ஸ் அல்லது எந்தவித அடையாளமும் இருத்தல் கூடாது.

விண்ணப்ப பட்டியலில் இடம்பெற்ற புகைப்படங்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட புகைப்படங்கள் கண்காட்சி, சமூக ஊடகங்கள், இணைய தளம் மற்றும் அச்சு ஊடகங்களில் வெளிவர பயன்படுத்தப்படும். புகைப்பட கண்காட்சியின் நடுவர்களின் முடிவே இறுதியானது. மேலும், விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அனைவரும் நிர்வாகம் எடுக்கும் அனைத்து வகையான முடிவுக்கும் கட்டுப்பட்டவர்கள் ஆவார்கள்.

இப்புகைப்படப் போட்டியானது இரண்டு பிரிவுகளின் கீழ் நடத்தப்படும். இப்புகைப்படப் போட்டியில் கலந்து கொள்ள 18 வயது வரையிலான நபர்கள் ஒரு பிரிவாகவும், 18 வயதிற்கு மேற்பட்ட நபர்கள் ஒரு பிரிவாகவும் என இரண்டு பிரிவுகளின் கீழ் போட்டியில் கலந்து கொள்ளலாம். மேலும், புகைப்படப் போட்டிக்காக அனுப்பப்படும் புகைப்படங்கள் அனைத்தும் தகுதி வாய்ந்த தேர்வு குழுவினரால் கூராய்வு செய்யப்பட்டு முதல், இரண்டாம் மற்றும் ஆறுதல் பரிசுகள் வழங்கப்படும்.

இப்போட்டியில் ஒவ்வொரு பிரிவிலும் தெரிவு செய்யப்படும் மிகச்சிறந்த புகைப்படத்திற்கு முதல் பரிசாக ரூ.1 இலட்சமும், இரண்டாம் பரிசாக ரூ.50 ஆயிரமும், 10 புகைப்படங்களுக்கு ஆறுதல் பரிசாக தலாரூ. 5 ஆயிரமும் வழங்கப்படும். மேலும், ஒவ்வொரு பிரிவிலும் மிகச்சிறந்ததாக தெரிவு செய்யப்படும் புகைப்படம் புத்தகக் கண்காட்சி நடைபெறும் அனைத்து நாட்களிலும், பொதுமக்களின் காட்சிக்காக வைக்கப்படும்.

எனவே, புகைப்படக்கலைஞர்கள், மாணவர்கள், பொதுமக்கள் தங்களது படைப்புகளை 14.08.2025 முதல் 21.08.2025 ஆம் தேதி வரை அனுப்பிவைக்கலாம். புகைப்படப் போட்டிக்காக அனுப்பப்படும் புகைப்படங்களை மாவட்ட நிர்வாகத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளமான https://thoothukudi.nic.in/ இல் வெளியிடப்படும் இணைப்பில் (LINK) பதிவேற்றம் செய்யலாம் என மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்துள்ளார்.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement