திருப்பூரில் வகுப்பறையில் மயங்கி விழுந்து உயிரிழந்த பள்ளி மாணவி
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உடுமலையை அடுத்த கல்லாபுரம் இந்திராபுதுநகர் மலைவாழ் குடியிருப்பை சேர்ந்தவர் முருகேசன் மகள் புவனேஸ்வரி. இவர் உடுமலை பாபுகான் வீதியில் உள்ள பெண்கள் சமூக நல விடுதியில் தங்கியிருந்து, உடுமலை பாரதியார் நூற்றாண்டு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு படித்து வந்தார்.
இந்த நிலையில் புவனேஸ்வரி நேற்று காலை வழக்கம்போல் பள்ளிக்கு சென்றுவிட்டு, மதிய உணவுக்காக விடுதிக்கு வந்தார். அங்கு மதிய உணவு சாப்பிட்டு விட்டு, மீண்டும் புவனேஸ்வரி வகுப்பறைக்குச் சென்று பாடத்தை கவனித்தார்.
அப்போது, புவனேஸ்வரி திடீரென மயங்கி விழுந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த சக மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் உடனடியாக புவனேஸ்வரியை மீட்டு சிகிச்சைக்காக, உடுமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர் ஏற்கனவே புவனேஷ்வரி இறந்து விட்டதாக தெரிவித்தார். இதையடுத்து மாணவியின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
மேலும், போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் படி விரைந்து வந்த போலீசார் புவனேஸ்வரியின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து மாணவியின் சாவுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கருத்துக்கள்