advertisement

தூத்துக்குடியில் வீடுகளில் பூட்டை உடைத்து திருட்டு : 4  பேர் கைது!

ஜூன் 14, 2025 5:56 முற்பகல் |

 

தூத்துக்குடியில் பூட்டியிருந்த இரண்டு  வீட்டின்  பூட்டை உடைத்து ரூ.8 லட்சத்து 75 ஆயிரம் மதிப்புள்ள 35 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்த 4 கொள்ளையர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

தூத்துக்குடி, சிலுவையார் கெபி தெருவைச் சேர்ந்த  கில்பர்ட் செல்லையன் கடந்த 8 ந்தேதிஅன்று தனது மனைவியுடன் திருவனந்தபுரம் சென்றுள்ளார்.இதனை நோட்டமிட்ட கொள்ளயர்கள் வீட்டிற்குள் புகுந்து வீட்டில் இருந்த 32 ½ சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ.24,500 பணம் ஆகியவற்றை திருடி சென்றனர்.இதையடுத்து இதுகுறித்து கில்பர்ட் செல்லையன் அளித்த புகாரின் பேரில் தென்பாகம் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

மேலும் இச்சம்பவம் தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. உத்தரவின்படி, தனிப்படை போலீசார் மற்றும் தென்பாகம் காவல் நிலைய காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில் தூத்துக்குடி மினிசகாயபுரம் பகுதியைச் சேர்ந்த மரிய அந்தோணி ஆக்னல், ராஜூவ்நகரை சேர்ந்த கண்ணன், பீச்ரோடு பகுதியைச் சேர்ந்த அரவிந்த் மற்றும் தூத்துக்குடி போல்பேட்டை மேற்கு பகுதியைச் சேர்ந்த  மோகன் ஆகியோர் சேர்ந்து கில்பர்ட் செல்லையன் வீட்டிற்குள் புகுந்து தங்க நகைகள் மற்றும் பணத்தை திருடியது தெரியவந்தது.

இதையடுத்து உடனடியாக  போலீசார் 4 பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் இதேபோன்று கான்வென்ட் ரோடு பகுதியில் பூட்டியிருந்த ஒரு வீட்டில் பூட்டை உடைத்து வீட்டில் இருந்த 14 ¾ சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ.40 ஆயிரம் பணத்தை திருடியதும் தெரியவந்தது.

இதனை தொடர்ந்து போலீசார் அந்த 4 பேரிடமிருந்து இரண்டு வழக்குகளிலும் சேர்த்து மொத்தம் ரூ.8 லட்சத்து 75 ஆயிரம் மதிப்புள்ள 35 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ.20 ஆயிரம் பணம் மற்றும் ஒரு கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து தென்பாகம் காவல் நிலைய போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement