திமுக அரசு வடமாெழிக்கு வால் பிடிப்பதேன் ? : சீமான்
ருச்செந்தூர் கோவிலில் தமிழ் குடமுழுக்கு என்ற தி.மு.க. அரசின் வெற்று அறிவிப்பினை ஒருபோதும் ஏற்க முடியாது என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: தமிழ் இறையோன் திருச்செந்தூர் திருமுருகப்பெருமானுக்கு தமிழில் குடமுழுக்கு நடத்தப்பட வேண்டுமென்று நாம் தமிழர் கட்சியின் வீரத்தமிழர் முன்னணியும் - தெய்வத்தமிழ் பேரவையும் இணைந்து திருச்செந்தூரில் முன்னெடுத்த அறப்போராட்ட பொதுக்கூட்டத்தினால் ஏற்பட்டுள்ள மக்கள் எழுச்சியின் விளைவாக, தற்போது திருச்செந்தூர் திருக்கோவில் நிர்வாகம் சார்பாக தமிழ்த்திருமுறைகள் முற்றோதல் நடைபெறும் என்றும், அதுதான் தமிழ் குடமுழுக்கு என்றும் ஏமாற்றும் வெற்று அறிவிப்பினை தி.மு.க. அரசு வெளியிட்டிருப்பதை ஒருபோதும் ஏற்க முடியாது.
அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு 'தமிழிலும்' குடமுழுக்கு நடத்தப்படும் என்று கூறுவது வெட்கக்கேடானது. குடமுழுக்கு முழுமையாக தமிழில் நடத்தப்பட வேண்டும். தாய்த்தமிழில் குடமுழுக்கு என்பது தி.மு.க. அரசு வேண்டா வெறுப்பாக இடும் பிச்சையோ, சலுகையோ அல்ல; திருச்செந்தூர் ஒன்றும் ஆந்திராவிலோ, கர்நாடாகவிலோ, கேரளாவிலோ அல்லது வேறு எந்த நாட்டிலோ இல்லை.
திருச்செந்தூர் திருமுருகப்பெருமான் கோபுர கலசங்கள் நன்னீராட்டப்படும் போதும், வேள்விச்சாலையிலும் தமிழ் மந்திரங்கள் ஓதி தமிழில் குடமுழுக்கு நடத்தப்பட வேண்டும் என்பதே தமிழ் அறிஞர்கள், மெய்யன்பர்கள் மற்றும் தமிழ் மக்களின் கோரிக்கையும், விருப்பமுமாகும். குறைந்தபட்சம் சம்ஸ்கிருதத்திற்கு இணையாக சரிபாதி வேள்விச்சாலைகள் அன்னைத்தமிழுக்கு வழங்கப்பட வேண்டும். கோபுர கலசங்கள் நன்னீராட்டின்போது கோபுர உச்சியிலும் தமிழ் மந்திரங்கள் ஒலிக்கப்பட வேண்டும் என்பதே எங்களுடைய கோரிக்கையாகும்.
தமிழ்நாடு அறநிலையத்துறையின் கீழ் உள்ள அனைத்து கோவில்களிலும் அன்னைத்தமிழில் குடமுழுக்கு நடத்தப்பட வேண்டும் என்பதை ஐகோர்ட்டே தம்முடைய தீர்ப்பின் மூலம் உறுதி செய்துவிட்டது. அதனை முழுமையாக நடைமுறைப்படுத்துவதில் தி.மு.க. அரசிற்கு ஏன் இத்தனை தயக்கம்? ஏன் இத்தனை நடுக்கம்? தமிழ், தமிழர், தமிழ்நாடு என்று உதட்டளவில் உச்சரித்து தமிழரை ஏய்த்து கிடைத்த அதிகாரத்தை வைத்து பிழைக்கும் தி.மு.க. அரசு, தமிழர் உரிமையை காவு கொடுக்கும் இழிசெயலை எப்போது கைவிடப்போகிறது?
தாய்த்தமிழ் கோபுர கலசம் ஏற வேண்டும் என்பதே எங்களின் முதன்மையான கோரிக்கை! அதனை நிறைவேற்றும் வகையில், தமிழ் இறையோன் திருச்செந்தூர் திருமுருகப்பெருமானுக்கு குடமுழுக்கு நன்னீராட்டின் போதும், வேள்விச்சாலையிலும் தமிழ் மந்திரங்கள் ஓதி தமிழில் குடமுழுக்கு நடந்திட தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன். இல்லையென்றால் திட்டமிட்டபடி நாம் தமிழர் கட்சி அறப்போராட்டத்தை முன்னெடுக்கும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்
கருத்துக்கள்