அரசு புறம்போக்கு இடத்தை ஆக்கிரமிப்பு செய்த நபர்கள் மீது கலெக்டர் எடுப்பாரா ?- சி.த.செல்லப்பாண்டியன் கேள்வி
தூத்துக்குடியில் அரசு புறம்போக்கு இடத்தை அதிகாரிகள் துணையுடன் ஆக்கிரமிப்பு செய்யும் நபர்கள் மீது கலெக்டர் இளம்பகவத் நடவடிக்கை எடுப்பாரா? என முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் கேள்வி எழுப்பினார்.
தூத்துக்குடி மாவட்டம் தமிழ்நாட்டின் தென் பகுதியில் அமைந்துள்ள ஒரு கடலோர மாவட்டமாகும். தூத்துக்குடியை தலைநகராக கொண்டு 1986ல் அக்டோபர் 26ம் தேதி மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.இராமச்சந்திரனால், திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து புதிய மாவட்டமாக தூத்துக்குடி மாவட்டம் உருவாக்கப்பட்டு 38 ஆண்டுகளை கடந்து விட்ட நிலையில், தூத்துக்குடியை தலைமையிடமாகக் கொண்டு விளாத்திக்குளம், கோவில்பட்டி, திருச்செந்தூர், ஓட்டப்பிடாரம், ஸ்ரீவைகுண்டம் என 6 தொகுதிகள் தற்போது உள்ளநிலையில் முக்கியமாக முன்னணி பெற்ற தொழிற்சாலைகள், மின்உற்பத்தி நிலையங்கள், உப்பளங்கள், வேளாண்மை மற்றும் மீன்பிடித்தல் போன்ற பொருளாதார நடவடிக்கைகளுக்கு பெயர் பெற்று விளங்குகிறது.
தூத்துக்குடி துறைமுகம் இந்தியாவின் முக்கியமான இயற்கை கடல்துறைமுகங்களில் ஒன்றாகும். நாட்டின் பல பகுதிகளை இணைக்கும் வகையில் விமானநிலையம், இரயில்நிலையம், சாலை போக்குவரத்து போன்ற நான்கு கட்டமைப்பு வசதிகள் இருப்பதால் நாளுக்குநாள் வளர்ச்சியடைந்து வருகிறது.
தூத்துக்குடி மாவட்ட வளர்ச்சிக்காக மத்திய, மாநில அரசுகள் பல கோடி நிதி ஒதுக்கி பல்வேறு அடிப்படை கட்டமைப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றன. குறிப்பாக ஸ்மார்ட்சிட்டி திட்டத்தில் தூத்துக்குடி மாநகரம் இணைக்கப்பட்டு வளர்ச்சிப்பணிகள் நடைபெற்றும் வருகின்றன.
இந்த நிலையில் பல்வேறு முறைகேடுகளும், அதிகளவில் நடைபெறுகின்றன. இதுகுறித்து அதிமுக முன்னாள் அமைச்சரும், மாநில வர்த்தக அணி செயலாளருமான சி.த.செல்லப்பாண்டியன் கூறுகையில்: தற்போது உள்ள அரசும், அதில் பணியாற்றக் கூடிய சிலர் செய்யக் கூடிய முறைகேடுகளுக்கு அளவே இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது. கொள்ளையடிப்பதற்கும் கூட்டணி அமைத்து ஆளுங்கட்சியைச் சேர்ந்த சிலரும் உடந்தையாக இருந்து வருவது தான் வேதனையாக இருக்கிறது. இந்த மாவட்டம் மறைந்த புரட்சித்தலைவர் எம்ஜியாரால் உருவாக்கப்பட்டது. மாவட்டத்தின் வளர்ச்சியையும் மக்கள் நலனையும் கருத்தில் கொண்டு எம்ஜிஆர், ஜெயலலிதா, பழனிச்சாமி ஆகியோர்கள் பணியாற்றினார்கள். தற்போது இந்த மாவட்டத்தின் அவலநிலைகளை பார்க்கும் போது, சற்று வேதனையாகவே இருக்கிறது. அரசாங்கத்திற்கு சொந்தமான பல இடங்கள் நத்தம், புறம்போக்கு அரசு சார்ந்த வகைக்கு பயன்படுத்துவது வழக்கமான நடைமுறையாகும். ஆனால் தற்போது அதுபோன்ற இடங்களையெல்லாம் ஆளுங்கட்சியை சேர்ந்தவர்கள் அதிகாரிகள் துணையுடன் பட்டா போட்டு விற்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு மாவட்ட நிர்வாகத்தில் இருக்கின்ற சிலரும், ஆளும்கட்சியை சேர்ந்து முக்கிய பிரமுகர்களும் உடந்தையாக இருந்து செயல்படுவது மிகவும் கண்டனத்திற்குரியதாகும்.
தூத்துக்குடி மாவட்டத்தில் பணியாற்றும் ஊடகத்துறையில் உள்ளவர்களுக்கு 25 ஆண்டுகளுக்கு மேலாக வைக்கப்பட்ட கோரிக்கைகளை நிறைவேற்றாமல் பணம் கொடுப்பவர்களுக்கு மட்டும் பட்டா வழங்குவது இந்த ஆட்சியின் சாதனையாகும். மாவட்ட நிர்வாகத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஊடக துறையினருக்கு எல்லா மாவட்டத்திலும், மானிய விலை மற்றும் இலவசமாக சூழ்நிலைக்கேற்ப வழங்கியுள்ளனர். இந்த மாவட்டத்தில் தொடர்ந்து அத்திட்டத்தை நடைமுறைப்படுத்தாதது ஏன்? மற்றவர்களுக்கு இடத்தை வழங்கி பட்டாவும் வழங்கி வரும் நிலையில், மாவட்ட நிர்வாகம் ஊடகத்துறையினரை மட்டும் கண்டுகொள்ளாதது ஏன்? என்று புரியாத புதிராக உள்ளது. இதற்கு விரைவாக தீர்வு காண வேண்டும்.
மேலும், மீளவிட்டான் பகுதி 1 கிராமத்தில் நத்தம் புறம்போக்கு இடம் அரசுக்குச் சொந்தமானது. ஆயிரக்கணக்கான இடங்கள் இருந்து வருகிறது. இந்த இடத்தை செல்வாக்கு வசதிமிக்க நபர்கள் ஆளுங்கட்சி துணையுடன் ஆக்கிரமித்து வருகின்றனர். இதில் பொன்சிங் மனைவி வீணாம்பிகை சௌதாமினி என்பவருக்கு தூத்துக்குடி வட்டாட்சியர் முரளிதரன் கடந்தாண்டு 10.10.2024 அன்று 97 செண்ட்க்கு பட்டா வழங்கியுள்ளார். பட்டா எண்: 1233ல் 18 செண்ட் இடம் பட்டா எண் 1231ல் 3 செண்ட் இடம் பட்டா எண்: 1232ல் 8 செண்ட் இடம் பட்டா எண்: 1230ல் 40 செண்ட் இடம் பட்டா எண்: 1229ல் 7 செண்ட் இடம், பட்டா எண்: 1228ல் 21 செண்ட் இடம் ஆக மொத்தம் 97 செண்ட் இடத்தை நத்தம் புறம்போக்கு அரசு இடத்தை தனிநபருக்கு தாரை வார்க்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக இராமச்சந்திரன் என்பவர் மாவட்ட கலெக்டர் இளம்பகவத் மற்றும் மாவட்ட குற்றப்பிரிவு, தமிழக முதலமைச்சரின் தனிப்பிரிவு, லஞ்சஒழிப்புத்துறை ஆகியவற்றிற்கு அரசு நத்தம் புறம்போக்கு காலிமனை இடத்தை தனி நபர் ஒருவருக்கு வருவாய்துறை அதிகாரிகள் பட்டா வழங்கியுள்ளனர் அரசு ஆவணமான அ பதிவேட்டில் காலிமனை நத்தம் புறம்போக்கு என்று உள்ளது, கணினியில் பதிவேற்றம் செய்யும்போது தனிநபர் ஒருவருக்கு கணினியில் செய்து பட்டா வழங்கப்பட்டுள்ளது.
இதில் தொடர்புடைய அதிகாரிகள் அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளித்துள்ளார். அதே போல கோரம்பள்ளம் கிராமம் பகுதி-2-ல் நத்தம் புறம்போக்கு இடம் 2 ஏக்கர் 37 செண்ட் இடத்திற்கும் அதே நாளில் பட்டா வழங்கப்பட்டுள்ளது என்ற புள்ளி விபரம் மாவட்ட நிர்வாகத்திற்கு தெரிந்து நடந்ததா? அல்லது அதிகாரிகளின் உதவியாளர்கள் உத்தரவின் பேரில் நிறைவேறியதா? என்று சி.த.செல்லபாண்டியன் கேள்வி எழுப்பியுள்ளார்.
கருத்துக்கள்