advertisement

அமித்ஷா வீடுதான் நீதிமன்றமாக இருக்கிறது - கம்யூனிஸ்ட் வாசுகி கடும் தாக்கு

செப். 19, 2025 5:57 முற்பகல் |

பழனிச்சாமி, செங்கோட்டையன் டெல்லிக்கு மாறி மாறி படையெடுக்கிறார்கள். அமித்ஷா வீடுதான் நீதிமன்றமாக இருக்கிறது - தூத்துக்குடியில் கம்யூனிஸ்ட் வாசுகி கடும் தாக்கி பேசினார்.
 
தூத்துக்குடியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மக்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி சிதம்பரநகர் பேருந்து நிறுத்தம் அருகில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்கு மாநகர செயலாளர் முத்து தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர்கள் சங்கரன், முனியசாமி முன்னிலை வகித்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் வாசுகி பேசுகையில்: சமீபத்தில் நடைபெற்ற இந்தியா, அமெரிக்கா வர்த்தக ரீதியாக சிலவற்றை அமெரிக்கா அதிபர் டிரம்ப் கூறிய சில கருத்துக்கள் ஏற்கவில்லை என்பதற்காக 25 சதவீத வரியும் கையெழுத்திடவில்லை என்பதற்காகவும், கச்சா எண்ணை ரஷ்யாவில் கொள்முதல் செய்வதற்காக 25 சதவீத வரியும் ஆக மொத்தம் 50 சதவீதம் விதித்துள்ளதால் இந்தியாவில் தொழிலாளர்கள் பல்வேறு வகையில் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் கார்ப்ரேட் நிறுவனங்களுக்கு மட்டுமே உதவி செய்து ஏழைகளையெல்லாம் பாதிப்படைய செய்கிறார் மோடி. அதேபோல் தீவிரவாத தாக்குதல் நடைபெற்று காஷ்மீர் பாதிக்கப்பட்ட போது ஏற்பட்ட இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போரின் போது சமாதான பேச்சுவார்த்தைகள் நடத்தி போரை நிறுத்தியது நான் தான்; என்று டிரம்ப் கூறிய போது அவரது கருத்துக்கு 56 இன்ச் மார்பு கொண்ட பிரதமர் மோடி எந்த பதிலையும் தெளிவாக நாட்டு மக்களுக்கு கூறாதது ஏன்?

தேர்தல் ஆணையத்தோடு கூட்டுசேர்ந்து கொண்டு எதிர்கட்சிகளை பழிவாங்கி வருகின்றது பிஜேபி அரசு. கார்ப்ரேட் நிறுவனங்களுக்கு எல்லா கடன்களையும் கொடுத்து  பல்வேறு சலுகைகளை வழங்கி வருகின்றனர். ஏழை எளிய மக்கள் மீது அனைத்து வரிகளையும் விதித்து நிர்மலா சீத்தாராமன் பழிவாங்கி வருகிறார். 
11 வருடம் மோடி ஆட்சியில் அராஜகம் தான் தலைவிரித்தாடுகிறது. லண்டனுக்குச் சென்று தான் அண்ணாமலை அரசியல் படிக்க வேண்டுமா? இங்கே இருக்கிற அடுப்பாங்கரையில் இருந்தே படித்து விடலாம்.
வரதட்சணை பழக்கம் கூண்டோடு மறைய வேண்டும் என்றால் கம்யூனிஸ்ட் கட்சியில் இருக்கக்கூடிய உறுப்பினர்கள் அவர்களது குடும்பங்களில் இந்த மாற்றத்தை கொண்டு வர முயற்சிக்க வேண்டும். பல்வேறு கட்சிகளுக்கு பின்னால் இன்று இளைஞர்கள் இருக்கின்றனர். தவெக விற்க்கு பின்னால், சீமான் கட்சிக்கு பின்னால், திராவிட கட்சிகளுக்கு பின்னால், நம்முடைய கட்சியிலும் இளைஞர்கள் இருக்கின்றனர். இளைஞர்கள் நினைத்தால் சமூகத்தை மாற்ற முடியும். விவேகானந்தர் மிக அழகாகச் சொன்னார் 20 இளைஞர்களை கொடுங்கள் இந்தியாவின் தலைவிதியை மாற்றிக் காட்டுகிறேன் என்று, அந்த இளைஞர்களை அவரவர் கட்சி இதையெல்லாம் சமூக கொடுமைகளை நீங்கள் எதிர்க்க வேண்டும். உங்களது வாழ்க்கையில் இருந்து மாற்றத்தை துவங்க வேண்டும் என்று நாங்கள் சொல்கிறோம். விஜய் சொல்லுகிறாரா? அவருடைய தம்பிகளுக்கு, சீமான்  சொல்லுகிறாரா?  அவருடைய தம்பிகளுக்கு மற்ற பல கட்சிகள் அவர்களது உறுப்பினர்களுக்கு சொல்லுகிறார்களா? என்கிற கேள்வியை நான் கேட்கிறேன். 

நாங்கள் சொல்கிறோம். குடும்ப வன்முறை செய்தால் கட்சி உன் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் என்று நாங்கள் சொல்லுகிறோம். குடிக்காதே உன் மீது நடவடிக்கை வரும் என்று மார்க்சிஸ்ட் கட்சி சொல்லுகிறது. மதுவிலக்கு வேண்டும் என்று குரல் உயர்த்தி பேசுகிற பல கட்சிகள் அவர்களது உறுப்பினர்களை ஒழுங்குபடுத்துவதற்கு ஒரு இன்ச் ஆவது முயற்சி எடுத்து இருப்பார்களா? அதனால் தான் சொல்றோம் கூட்டம் போடுறது, லட்சக்கணக்கான மக்களை திரட்டுவது, தீர்மானங்களை போடுவது, பத்திரிகைகளில் பெரிய அளவில் செய்திகள் வருவது, சமூக வலைத்தளத்தை முற்றாக தன்மையப்படுத்திக் கொள்வது இதெல்லாம் நடந்தாலும் ரிசல்ட் என்ன? உங்க கட்சியையே ஒழுங்குபடுத்த முடியலன்னா சமுதாயத்தை எப்படி ஒழுங்குபடுத்துவீர்கள். இந்த கேள்வியை அந்தந்த கட்சியில் இருக்கிற இளைஞர்கள் கேட்க வேண்டுமா? வேண்டாமா? நீ கேள்வி கேள் என்று சிபிஎம் தன்னுடைய உறுப்பினர்களுக்கு சொல்லுகிறது. அரசியல் தலைமை குழு உறுப்பினராக இருந்தாலும் மாநிலச் செயலாளராக இருந்தாலும் தவறு என்று நீ நினைத்தால் விமர்சனம் செய் என்று சொல்லுகிற கட்சி மார்க்சிஸ்ட் கட்சி. 

தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிச்சாமி தன்னை சிங்கம் என்று நினைத்துக் கொண்டு தனியாக ரோடுஷோ சென்று கொண்டிருக்கிறார். இவர் இன்றைக்கு மக்கள் மத்தியில் அரசியல் பேசுவதற்கு என்ன அருகதை இருக்கிறது. கம்யூனிஸ்ட்களை சொல்கிறார். முன்பெல்லாம் நீங்கள் அதிகம் போராடுவீர்கள். இப்போது நீங்கள் போராடுவதே கிடையாது. திமுகவை நீங்கள் ரொம்ப தடவி கொடுக்கிறீர்கள்.திமுக உங்களை விழுங்கி விடும் என்கிறார்.  திமுக பாம்பும் இல்லை. கம்யூனிஸ்ட்கள் தவளையும் இலi;ல. என்ன நெனச்சிட்டு இருக்காரு எடப்பாடி. நீங்க உங்களை கவனிங்க.  நீங்க தான் தவளை. பிஜேபி பாம்பு முழுங்கிட்டு இருக்கு. நீங்க பாதி உள்ள போய்ட்டீங்க. தவளையோட கை கால் தான் பாம்போட வாயிலிருந்து வெளியில் நீட்டிக்கிட்டு இருக்கு. நீங்க அதிமுகவை கவனியுங்கள். 
இப்போது மாறி மாறி டெல்லிக்கு படை எடுக்கிறார்கள். அதிமுக -  பாஜக கூட்டணியில்  ஒரு விஷயம் சொன்னால் பரவாயில்லை. ஆனால் இப்போது நடப்பது என்ன? 

 கட்சியின் உள்விவகாரத்தில் அமித்ஷா தலையிடுகிறார்.  அவருடைய வீடு தான் நீதிமன்றமாக இருக்கிறது. இன்று இவர்களின் அணி எப்படி இருக்கிறது அதிமுக ஏற்கனவே இரண்டு மூன்று ஆக இருக்கிறது. அதில் என்டிஏ கூட்டணியிலிருந்து டிடிவி தினகரன் வெளியேறி விட்டார். தேமுதிக தடுமாறிக் கொண்டிருக்கிறது. ஓபிஎஸ் வெளியேறிவிட்டார். இருக்கிற அதிமுகவில் இருக்கின்ற செங்கோட்டையன் உள்ளிட்டவர்களை வெளியேற்றி விட்டனர். செங்கோட்டையன் என்ன செய்கிறார். இங்கு பிரச்சனை என்றால் இங்கு தானே தீர்க்க வேண்டும் டெல்லி செல்கிறார் கேட்டால் ஹரித்துவாருக்கு மன அமைதிக்காக போகின்ற வழியில் அமித்ஷாவை சந்தித்தேன் என்கிறார். இவர் சென்று வந்த பிறகு எடப்பாடி பழனிச்சாமி டெல்லி செல்கிறார். நீங்கள் எங்கே சென்றீர்கள் என்றால் டெல்லியில் இருக்கும் அதிமுக அலுவலகத்தை பார்க்க சென்ற போது போகும் வழியில் அமித்ஷாவை பார்த்தேன் என்கிறார். அது ஏன் எல்லோரும் போகும் வழியில் பார்க்கிறீர்கள். அதுவும் இரவு நேரத்தில் பார்க்கிறீர்கள். வெளியில் வந்தவுடன் கைக்குட்டையை வைத்து முகத்தை மறைத்துக் கொள்கிறீர்கள் எல்லோரும் இன்று சிரிப்பாக சிரிக்கின்றனர்.

 பிஜேபி-க்கு இது கைவந்த கலை. பல மாநிலங்களில் பார்த்திருக்கோம். மாநில கட்சிகளோடு கூட்டணி வைப்பது, அவர்களை கபளிகரம் செய்வது. அந்த கட்சியை இல்லாமல் ஆக்குவது. எத்தனை கட்சி உதாரணம் நாங்கள் சொல்லணும். அதிமுகவுக்கு அந்த கதி வரவேண்டும் என்று நினைக்கிறாரா? அதனால் எடப்பாடியார் அதை பாருங்க நாங்க என்னமோ திமுகவ தட்டி கேக்கலங்கிறீங்க. என்னைக்கு நாங்க தட்டி கேக்காம இருந்தோம்? நீங்க பிஜேபி கூட்டணியில் மத்தியில் இருந்த போது நீங்க எதையுமே தட்டி கேட்கவில்லை.  பத்திரிக்கையாளர்களிடம் கூட்டணி தர்மத்திற்காக தட்டிக் கேட்கவில்லை என்றீர்கள்.
எங்களுக்கு கூட்டணி தர்மம் கிடையாது எங்களுக்கு மக்கள் தர்மம் தான் உண்டு கூட்டணி வைப்பதும் மக்களின் நலனுக்காக அதனால் அந்த நலன் எப்போதெல்லாம் பாதிக்கப்படுகிறதோ அப்போது எந்த கட்சியாக இருந்தாலும் தட்டிக் கேட்போம் தவெக தலைவர் விஜய் மேடை ஏறி பேசுகிறார். நான் ஆட்சிக்கு வந்தால் எல்லாம் சுபிட்சம் ஆகிவிடும் என்று. எப்படி ஆகும். என்ன கொள்கை இருக்கிறது? இன்றைக்கு நீங்கள் எந்தெந்த அரசுகளை குறை சொல்கிறீர்களோ அந்த அரசு பின்பற்றுகிற கொள்கைகளுக்கு மாற்றாக நீங்கள் என்ன கொள்கை வைத்திருக்கிறீர்கள். நாங்கள் மாற்று கொள்கை வைத்துள்ளோம். நீங்கள் உங்களது மாற்றிக் கொள்கையை எப்போது சொல்வீர்கள் என்று எதிர்பார்த்து கொண்டிருக்கிறோம் என்று வாசுகி பேசினார்.

திண்டுக்கல் எம்.பி. சச்சிதானந்தம் பேசுகையில்: சமீபத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பிரதமர் மோடி எதிர்கட்சிகளின் எந்த கேள்விகளுக்கும் பதிலுரை வழங்காமல் வெளிநாடுகளுக்கு செல்வதில் மட்டும் ஆர்வம் காட்டினார். எந்த விவாதமும் இல்லாமல் 14 தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளனர் இதுவும் விவாதமின்றி 21 நாட்கள் நடைபெற்ற கூட்டத்தில் 34 மணி நேரம் மட்டும் தான் முக்கிய பிரச்சனை பற்றி பேசப்பட்டது. இந்தியை திணிக்க வேண்டும் என்பதற்காக தமிழ்நாட்டில் புதிய கல்விக் கொள்கை அறிமுகம் செய்ய வேண்டும் என்று கூறி எதிர்கால தலைமுறையினரை திசை திருப்பும் செயலில் ஈடுபடுகிறார்கள். அதற்கு திமுக அரசு ஒத்துக்கொள்ளாத காரணத்தினால் கல்வி நிதியை தர மறுக்கிறார்கள். தமிழர்களின் நாகரீகம் பண்பாட்டை அழிப்பது தான் இவர்களது வேலையாக இருக்கிறது என்று பேசினார். 

மாவட்ட செயற்குழு உறுப்பினர் அர்ச்சுனன் பேசுகையில்: இந்த மாவட்டத்தில் ஸ்டெர்லைட் இயங்கிய காலத்தில் ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் வெளிநாடுகள் வரை அவர்களது பணத்திலேயே சென்று வந்தனர். 99 நாட்கள் தொடர் போராட்டம் நடைபெற்று 100வது நாள் கலெக்டர் அலுவலகம் சென்ற போது பிரச்சனையை பேசி தீர்க்க வேண்டிய கலெக்டர் கோவில்பட்டியில் சமபந்தி முகாமிற்கும், வருவாய் அலுவலர் கயத்தாறுக்கும் சென்றுவிட்டனர். இதற்கிடையே விவிடி சிக்னல் பகுதியில் நடைபெற்ற கலவரத்திற்கு இன்ஸ்பெக்டர் ஹரிஹரன் 2 மாடுகளின் வால்களை திருக்கி விட்டதால் ஏற்பட்டது. கலெக்டர் அலுவலகம் அருகே ஸ்டெர்லைட் ஆதரவாளர்கள் வன்முறையை தூண்டி விட்டு குளிர்காய்ந்தனர். அருணா ஜெகதீசன் ஆணையம் சுட்டிக்காட்டிய யார் மீதும் இன்று வரை நடவடிக்கை எடுக்கவில்லை. தாசில்தார் உள்ளிட்ட பல அதிகாரிகள் பல கோடி மதிப்பிலான பங்களாக்களை கட்டி சொகுசு வாழ்க்கை நடத்தி வருகின்றனர்.  இந்த தூத்துக்குடியில் கூட குடியிருக்கும் பலருக்கு வீட்டுமனை பட்டா வழங்காமல் பல தொழிலதிபர்களுக்கும் கார்ப்ரேட் நிறுவனங்களுக்கும் உதவிகள் செய்து ஏழை எளியவர்களை நடுத்தெருவில் விடுவது தான் இவர்களது வேலையாக இருக்கிறது என்று பேசினார்.

கூட்டத்தில் மாநில குழு உறுப்பினர் பூமயில், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ரசல், பேச்சிமுத்து, அப்பாதுரை, ராஜா, சண்முகராஜ், இடைகமிட்டி செயலாளர்கள் ரவிச்சந்திரன், நம்பிராஜன், முத்துக்குமார், மணி, ரவிதாகூர், கந்தசாமி, வேல்முருகன், மாவட்ட குழு உறுப்பினர்கள் மாரியப்பன், காசி, கணபதி சுரேஷ், ஜெபஸ்டீன்ராஜ், சுரேஷ், சித்ராதேவி, இனிதா, ஸ்ரீநாத், உப்புச்சங்கம் பொன்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
 

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement