இலங்கைக்குக் கடத்த முயன்ற சாம்பூ மூட்டைகள் பறிமுதல்
தூத்துக்குடி திரேஸ்புரம் கடற்கரை வழியாக இலங்கைக்குப் படகு மூலம் கடத்துவதற்காகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 30 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சோப்புகள், ஷாம்பூ பாக்கெட்டுகளை க்யூ பிரிவு போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
தூத்துக்குடி திரேஸ்புரம் கடற்கரைப் பகுதியில் இருந்து கடல் வழியாக இலங்கைக்குப் பெரும் பொருள்குவியல் கடத்தப்பட உள்ளதாகக் க்யூ பிரிவு ஆய்வாளர் விஜய் அனிதாவுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இந்த ரகசியத் தகவலின் அடிப்படையில், க்யூ பிரிவு உதவி ஆய்வாளர் ராமச்சந்திரன், சிறப்பு உதவி ஆய்வாளர் ராமர், ஆகியோர் அடங்கிய அதிரடிப் படையினர் நேற்று நடுஇரவில் திரேஸ்புரம் கடற்கரைப் பகுதியில் தீவிர ரோந்து மற்றும் இரவு நேரப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, திரேஸ்புரம் கடற்கரையின் வடபுறம் அமைந்துள்ள படகு நிறுத்தும் இடம் பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் ஒரு பைபர் படகு நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டிருந்தது. போலீசார் அந்தப் பகுதியை நோக்கி அதிரடியாக நெருங்குவதைக் கண்டதும், அங்கு நின்றிருந்த கடத்தல் கும்பலைச் சேர்ந்த நபர்கள் இருளின் மறைவைப் பயன்படுத்திப் பாய்ந்து ஓடித் தப்பினர்.
இதனைத் தொடர்ந்து போலீசார் அந்தப் பகுதிக்குச் சென்று சோதனையிட்ட போது, அங்குப் பதிவு எண் ஏதும் இல்லாத, கடலில் அதிவேகமாகச் செல்லக்கூடிய இரட்டை எஞ்சின் பொருத்தப்பட்ட பைபர் படகு ஒன்றில் கடத்துவதற்காகப் பல மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அந்தப் படகில் இருந்த 42 பெரிய மூட்டைகளை அவிழ்த்துப் போலீசார் சோதனையிட்ட போது, அவற்றுள் பின்வரும் பொருட்கள் சட்டவிரோதமாக இலங்கைக்குக் கடத்தக் கொண்டு வரப்பட்டது உறுதியானது.
158 அட்டைப் பெட்டிகளில் அடைக்கப்பட்டிருந்த மொத்தம் 9,480 எண்ணிக்கையிலான பப்பாளி வாசனை சோப்புகள், மொத்தம் 11,520 எண்ணிக்கையிலான சன்சில்க் கருமை நிற ஷாம்பூ பாக்கெட்டுகள் கைப்பற்றப்பட்டனர். இந்த வாசனை சோப்புகள், ஷாம்பூக்கள் மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட இரட்டை எஞ்சின் பைபர் படகு ஆகியவற்றின் மொத்த மதிப்பு சுமார் 30 லட்சம் ரூபாய் இருக்கும் என கூறப்படுகிறது.





கருத்துக்கள்