advertisement

பாலியல் வழக்கு: தேவகவுடா பேரன் குற்றவாளி; நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

ஆக. 01, 2025 11:58 முற்பகல் |

 

முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனான பிரஜ்வல் ரேவண்ணாவை, பாலியல் வழக்கில் குற்றவாளி என பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. பல பெண்களை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் இந்த அதிரடி தீர்ப்பு வெளியாகியுள்ளது.

முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணா. இவர், கர்நாடகா முன்னாள் முதல்வர் குமாரசாமியின் அண்ணன் மகனும் ஆவார். மதசார்பற்ற ஜனதா தளம் சார்பில் ஹாசன் தொகுதி எம்.பி.யாக பதவி வகித்து வந்த பிரஜ்வல் ரேவண்ணாவின் அந்தரங்க வீடியோக்கள் கடந்த ஆண்டு ஏப்ரல் 26ஆம் தேதி சமூக வலைதளங்களில் வேகமாக பரவின.

அதில், ரேவண்ணா பல பெண்களை வன்கொடுமை செய்யும் வீடியோக்கள் இருந்தன. இந்த வீடியோக்கள் அனைத்தும், அவரே ரெக்கார்டு செய்தவையாகும். இந்த வீடியோ வெளியான சில நாட்களிலேயே, ரேவண்ணா மீது அவரது 48 வயது பணிப்பெண் புகார் அளித்தார். அதில், ரேவண்ணா தன்னை இரண்டு முறை பாலியல் வன்கொடுமை செய்ததாக அப்பெண் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து, அவர் மீது 4 பாலியல் வழக்குகளை போலீசார் பதிவு செய்தனர். பின்னர், காவல்துறை சார்பில் அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக் குழு, இந்த வழக்கை கையில் எடுத்து விசாரணை நடத்தியது. இதில், ரேவண்ணா மீதான குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் இருப்பது கண்டறியப்பட்டதால் அவரை மே 31ஆம் தேதி போலீசார் கைது செய்தனர்.

இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாகியது. அதில், ரேவண்ணா மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதால், அவர் குற்றவாளி என நீதிபதி சந்தோஷ் கஜனன் தீர்ப்பளித்தார். மேலும், அவருக்கான தண்டனை விவரங்கள் நாளை (ஆக.2) வெளியாகும் என நீதிபதி தெரிவித்தார். முன்னாள் பிரதமரின் பேரன், முன்னாள் முதலமைச்சரின் மகன், முன்னாள் எம்.பி. என பல்வேறு அரசியல் தகுதிகளை கொண்ட ஒரு நபரை, பாலியல் வழக்கில் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பது பெரும் பேசுபொருளாகியுள்ளது.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement