advertisement

ஆந்திரா : ஆம்னி பஸ் தீ விபத்தில் திருப்பூர் இளைஞர் உயிரிழப்பு

அக். 25, 2025 10:48 முற்பகல் |

 

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் இருந்து தனியார் ஆம்னி பஸ் ஒன்று நேற்றுமுன்தினம் இரவு 9.30 மணியளவில் கர்நாடக மாநிலம் பெங்களூரு நோக்கி சென்று கொண்டிருந்தது. பஸ்சில் டிரைவர்கள் உள்பட 43 பேர் பயணம் செய்தனர். நேற்று அதிகாலை 3.30 மணி அளவில் ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் கல்லூர் மண்டலம் சின்னடேக்கூர் தேசிய நெடுஞ்சாலையில் உளிந்த கொண்டா கிராஸ் பகுதியில் பஸ் வந்து கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக சென்று கொண்டிருந்த ஒரு மோட்டார்சைக்கிள் மீது பஸ் பயங்கரமாக மோதியது.

இதில் தீ விபத்து ஏற்பட்டு பஸ் முழுவதுமாக எரிந்தது. போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து பஸ்சில் பற்றி எரிந்த தீயை அணைத்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.அப்போது பஸ்சுக்குள் உடல் கருகிய நிலையில் 19 பயணிகளை பிணமாக மீட்டனர். அவர்களது உடல்கள் அடையாளம் காண முடியாத அளவிற்கு எரிந்து போயிருந்தது.மரபணு சோதனை மூலம் அவர்களை அடையாளம் காண நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.இதேபோல பஸ்சின் அடிப்பகுதியில் இருந்து மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றவரும் பிணமாக மீட்கப்பட்டார். 

இதன் மூலம் இந்த கோர விபத்தில் மொத்தம் 20 பேர் பலியானது தெரியவந்தது. 22 பயணிகள் பஸ்சில் இருந்து குதித்து லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். இந்த விபத்தில் தமிழகத்தை சேர்ந்த இளைஞர் ஒருவரும் பலியான தகவல் கிடைத்துள்ளது. திருப்பூரை சேர்ந்த யுவன் சங்கர் ராஜா (வயது 22) என்ற இளைஞர் ஐதராபாத்தில் மருந்து ஆய்வக நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். விடுமுறைக்கு ஊருக்கு திரும்பிய நிலையில், பேருந்து தீ பிடித்த விபத்தில் உயிரிழந்த சோக சம்பவம் நடைபெற்றுள்ளது.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement